அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை


அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை
x
தினத்தந்தி 10 Feb 2018 3:51 AM IST (Updated: 10 Feb 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை புறநோயாளிகள் சீட்டு வாங்கும் இடத்தின் அருகே கழிவறையையொட்டி உள்ள ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் நேற்று அழகான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக வந்த பணியாளர்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் அந்த குழந்தையை தூக்கி பார்த்த போது, அது பிறந்து சில மணி நேரங்களிலேயே குப்பையில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த டாக்டர்கள் அந்த ஆண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த குழந்தையை பார்வையிட்டு விசாரித்தனர்.

மேலும் கள்ளக்காதல் விவகாரத்தில் பிறந்ததால் அந்த குழந்தையை, கல்நெஞ்சம் படைத்த தாய் குப்பையில் வீசி சென்று விட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டும் விசாரிப்பதோடு, குழந்தையை வீசி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story