ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Feb 2018 4:11 AM IST (Updated: 10 Feb 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட துணை தலைவர் அசோகன், போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் கூட்டணியின் முன்னாள் மாநில தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். காத்திருப்பு போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கும் ஊதியத்துக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும். தனி ஊதியம் ரூ.2 ஆயிரத்திற்குரிய முழுப்பண பலன்களையும் (ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, அகவிலைப்படி) வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வந்த சிறப்பு படிகளை 8-வது ஊதியக்குழுவில் உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்ற பட்டதாரி தகுதி பெற்ற அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் உயர்கல்விக்கான ஊக்க தொகை வழங்க வேண்டும். கிராமப்புற பள்ளிகளை போல தொடக்க கல்வித்துறையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு இணையதள வசதியுடன் கணினி வழங்கி, அதற்குரிய பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களை வலை தளத்தில் பதிவை முற்றிலும் ஆசிரியர்களை கொண்டு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Next Story