30 நாட்கள் நிற்காமல் ஓடும் திரைப்படம்


30 நாட்கள் நிற்காமல் ஓடும் திரைப்படம்
x
தினத்தந்தி 10 Feb 2018 1:38 PM IST (Updated: 10 Feb 2018 1:38 PM IST)
t-max-icont-min-icon

30 நாட்கள் தொடர்ந்து ஓடும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ஆண்டர்ஸ் வெபெர்க் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மூன்று, மூன்றரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தை பார்ப்பதற்கே, இப்போது நம்மவர்களில் பலருக்கு பொறுமை இல்லை. ஒரு இயக்குனர் என்னவென்றால் 720 மணி நேரம், அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடும் ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர் ஆண்டர்ஸ் வெபெர்க். இவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்.

குறும் படங்கள், பெரும் படங்கள் என்று மொத்தம் 300 படங்களை, கடந்த 20 வருடங்களில் இயக்கித் தள்ளியிருக்கிறார். இவர் ஒரு சகலகலா வித்தகர். போட்டோ எடுப்பார், வீடியோ பிடிப்பார், ஒலிக் கலவை செய்வார், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என்று வேறுபாடில்லாமல் அனைத்தையும் இயக்குவார். இவர் தனது கனவு படமாகவும், கடைசிப் படமாகவும், சாதனைப் படமாகவும் இந்த மிக நீண்ட படத்தைச் சொல்கிறார்.

‘ஆம்பியன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், மனிதனின் உள்ளுணர்வை சொல்லும் படமாம். இப்படிப்பட்ட படங்களை சாதாரணமாக பார்க்கவே பொறுமை உச்சத்தில் இருக்க வேண்டும்.

இந்தப் படத்தை ஒரு நிமிடம் கூட தூங்காமல், ஓய்வின்றி பார்த்தால் கூட முழுப் படத்தையும் பார்த்து முடிக்க 30 நாட்கள் ஆகும். இந்தப் படம், 2020-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி திரைக்கு வர இருக்கிறதாம். மிக நீண்ட நேரம் ஓடக்கூடிய படம் என்பதால் இந்த கால அவகாசம் தேவை என்கிறார் இயக்குனர்.

இப்போதைக்கு உலகின் நீளமான படம் என்றால் அது ‘மார்டன் டைம்ஸ் பார் எவர்’ தான். இந்தப் படம் மொத்தமாக 240 மணி நேரம் ஓடும். அதாவது 10 நாட்கள் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும். ‘ஆம்பியன்ஸ்’ படம் நான்லீனியர் என்ற முறையில் நேரடியாக கதையை சொல்லாமல், முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் விதமாக இருக்குமாம். இந்த படத்தின் டீசரை 2014-ல் வெபெர்க் வெளியிட்டார். பொதுவாக டீசர்கள் 20 நொடியில் இருந்து ஒரு நிமிடம் வரை ஓடக்கூடியதாக இருக்கும். ஆனால், ஆண்டர்ஸ் வெளியிட்ட ‘ஆம்பியன்ஸ்’ டீசர், 1 மணி 12 நிமிடம் ஓடியது. கிட்டத்தட்ட ஒரு சிறிய திரைப்படம் ஓடும் நேரம் இது.

படத்தின் சுருக்கமான டிரைலர் 2016-ல் வெளியிடப்பட்டது. அந்த டிரைலர் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும். 2018-ல் படத்தின் மெயின் டிரைலர் ரிலீஸ் ஆகிறது. இது 72 மணி நேரம் ஓடுமாம். நீங்கள் நினைப்பது சரிதான், இந்த டிரைலரைப் பார்க்க நீங்கள் 3 நாட்களை செலவிட வேண்டும். 2020-ல் முழுநீள திரைப்படம் வெளியாகும். அது தொடர்ந்து 720 மணி நேரம் நிற்காமல் ஓடும். அதாவது இந்த படத்தைப் பார்க்க நாம் ஒரு மாதம் விடுமுறை எடுத்து தியேட்டரே கதியென்று கிடந்து தொடர்ச்சியாக பார்க்க வேண்டும்.

‘இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா?’ என்று விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. 30 நாட்கள் தொடர்ந்து பார்த்தால்தான் படத்தைப் பார்க்க முடியும் என்றால் ரசிகர்களுக்கு ஓய்வு எப்போது?, ஒரு நாளைக்கு எத்தனை இடைவேளை?, அப்படி இடைவேளை விடும் நேரத்தையும் சேர்த்தால் 30 நாட்களுக்கு மேல் தியேட்டரில் இருக்க வேண்டுமே?, 30 நாட்கள் தொடர்ந்து படம் பார்த்தால் கண்கள் என்னவாகும்? என்ற எல்லா கேள்விகளுக்கும் ‘பொறுத்திருந்து பாருங்கள்!’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்கிறார், படத்தின் இயக்குனர் ஆண்டர்ஸ் வெபெர்க்.

சரி.. பொறுத்திருந்து பார்க்கலாம். 

Next Story