கணினியில் கலக்கும் பார்வையற்ற மாணவர்!
டெல்லியைச் சேர்ந்த பார்வையற்ற இளைஞர் கார்த்திக் சாவ்னி, கணினியிலும் அறிவியலிலும் புதிய சிகரங்களை எட்டி வருகிறார்.
விழியில் ஒளி இல்லாதபோதும், சுடர் விடும் ஞானம் பெற்றவர், கார்த்திக். சிறுவயது முதலே அறிவியல் பாடத்தில் அலாதி ஆர்வம் கொண்டிருந்தார். 12-ம் வகுப்பில் தான் படித்த பள்ளியில் கணினி அறிவியலில் முதலிடம் பிடித்தபோதும், நாட்டின் பெருமைக்குரிய கல்வி நிலையங்கள் இவருக்கு வாயில் திறக்க மறுத்துவிட்டன. ஆனால் அது போன்ற தடைகளை எல்லாம் தாண்டி எதிர்நீச்சல் போட்ட கார்த்திக், சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து முடித்திருக்கிறார்.
“நான் ஆரம்பத்தில், ஜே.இ.இ. தேர்வை கணினியில் எழுத விரும்பினேன். ஆனால் அதில் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன என்று ஐ.ஐ.டி.கள் கூறின. இருந்த போதும் எனது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அவை தெரிவித்தன. ஆனால் கடைசியில், ‘நீங்கள் ஜே.இ.இ. எழுதமுடியாது’ என்று சொல்லிவிட்டனர்” என்கிறார். ஆனால் தற்போது, பார்வையற்ற மாணவர்களையும் ஜே.இ.இ. தேர்வு எழுத அனுமதிப்பது என்று ஐ.ஐ.டி.கள் முடிவெடுத்திருக்கின்றன.
கார்த்திக்குக்குத் தற்போது அமெரிக்கா ரெட்மாண்டில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமையகத்தில் பணி கிடைத்திருக்கிறது. ஆனால், அறிவியலில் ஆர்வமுள்ள தன்னைப் போன்ற பார்வையற்ற மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று விரும்புகிறார்.
“பள்ளி நாட்களில் இருந்தே எங்களைப் போன்ற பார்வையற்றவர்களிடம் பலரும் சொல்வது, அறிவியல், தொழில்நுட்பத்தையெல்லாம் பார்வையற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான். நீங்கள் இசை அல்லது சமூக வியல் சார்ந்த பாடங்களைப் படியுங்கள் என்று ஆசிரியர்களும் கூறுவார்கள். அதிகபட்சமாக என்னிடம், நான் 12-ம் வகுப்பு படிக்கும்போது, நீங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வு வேண்டுமானால் எழுதலாம் என்றார்கள். அதுபோன்ற கருத்துகளை எல்லாம் நான் மாற்ற விரும்பினேன்” என்று கார்த்திக் சொல்கிறார்.
கார்த்திக்கும், அவரைப் போன்ற துடிப்பான, ஆனால் பார்வையற்ற இளைஞர்களும் இணைந்து, ‘ஐ-ஸ்டெம்’ என்ற, பார்வையற்ற மாணவர்களுக்குக் கைகொடுக்கும் அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்களில் 10 பேர், ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற முன்னணி நிறுவனங்களில் கல்வி பயில்பவர்கள். இவர்கள் தங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாடெங்கும் சென்று, பார்வையற்றோருக்கும் அறிவியல், கணினி பாடங்களை கற்பிப்பதன் அவசியத்தை ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களிடம் வலி யுறுத்துகிறார்கள்.
அப்படி கார்த்திக்குடன் இணைந்து செயல்படுபவர்களில் ஒருவர், அபிஷார் வாக்மோர். 2014-ம் ஆண்டு ஒரு பைக் விபத்தில் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பூஞ்சைத் தொற்றால் பார்வை நரம்புகள் அரிக்கப்பட்டவர். அதன் விளைவாய் பார்வையை இழந்தவர்.
இரு விழிகளிலும் பார்வை பறிபோனாலும் அதன் பிறகு 12-ம் வகுப்புத் தேர்வில் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்று அசத்தினார், அபிஷார். தொடர்ந்து ஜே.இ.இ. தேர்விலும் வெற்றி பெற்ற இவர், தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வருகிறார்.
அதேபோல, ஐ.ஐ.ஐ.டி.யில் எம்.எஸ்சி. பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற மாணவியான வித்யாவுடனும் கார்த்திக் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர்களின் முயற்சியால் சமீபத்தில், தொடர் கணினி செயல்பாட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பார்வையற்ற மாணவர்கள் பலரும் அதில் பங்கேற்று தங்கள் கணினித் திறமையை வெளிப்படுத்தினர்.
கார்த்திக் சாவ்னி அணியினரின் நல்ல முயற்சிகள் வெற்றி பெறட்டும்.
Related Tags :
Next Story