பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்வு


பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்வு
x
தினத்தந்தி 11 Feb 2018 3:30 AM IST (Updated: 11 Feb 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

கடந்த மாதம் 2-ந்தேதி முதல் நேற்று வரையான நிலையில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக, ஆந்திர அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி.யாக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.

அதன்படி டிசம்பர் மாதம் 27-ந்தேதி கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 2-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி விதம் தண்ணீீர் திறக்கப்பட்டு அதன் பின்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 29.30 அடியாக பதிவானது. 1,582 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த மாதம் 2-ந் தேதி நீர் மட்டம் 26.07 அடியாக பதிவாகி 1,012 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. அதன்படி கடந்த மாதம் 2-ந்தேதி முதல் நேற்று வரை ஏரியின் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 438 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து இதே அளவில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு ஏற்படும். அப்படி நீர் மட்டம் முழு கொள்ளளவு எட்டினால் பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலமாக புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்க சாத்தியமாகும். 

Next Story