மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 290 பேர் உயிரிழப்பு, போலீஸ் சூப்பிரண்டு தகவல்


மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 290 பேர் உயிரிழப்பு, போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:15 AM IST (Updated: 11 Feb 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்துகளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை நகர் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர் இன்ஸ்பெக்டர் மோகன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேணு கோபால், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் சாரண-சாரணியர் மாணவ-மாணவிகள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பேசியதாவது:-

இந்தியாவில் வாகன எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. ஆனால் வாகன விபத்துகளை பொறுத்தவரை இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் தமிழக அரசு சென்ற ஆண்டு முதல் வாகன விபத்தை குறைக்க கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. வருகிற 2020-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வாகன விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமாக வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2016-ம் ஆண்டு சாலை விபத்தில் 350 பேர் இறந்துள்ளனர். இதையொட்டி போலீசாரின் தீவிர நடவடிக்கையால் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 290ஆக குறைந்துள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 பேர் விபத்தில் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை 32ஆக உள் ளது. எனவே விபத்துகளை தடுக்க போலீசார் எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஒருவிபத்தில் ஒருவர் இறந்தால் அவரது குடும்பமே பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். சாலைகளில் உள்ள குறியீடுகளை பார்த்து அதன்படி நடக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. அத்துடன் இருசக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் அணிவதால் 75 சதவீத விபத்துகளில் உயிர்பலி தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணி பழைய அரசு ஆஸ்பத்திரி வரை நடைபெற்றது. பேரணியை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன் தொடங்கிவைத்தார். 

Next Story