கம்பம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு


கம்பம் அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 11 Feb 2018 3:15 AM IST (Updated: 11 Feb 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் ரூ.11 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமாகின.

கம்பம்,

கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரம் சாலையில் உள்ள தென்னந்தோப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் கண்காணிப்பாளராக கம்பத்தை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று காலையில் கடையில் இருந்து புகை வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் கடைக்கு விரைந்து வந்து பார்த்தபோது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கதவுகள் லேசாக திறந்திருந்தது தெரிய வந்தது.

மேலும் கடைக்குள் இருந்து புகை வெளியேறி கொண்டே இருந்தது. இதையடுத்து போலீசார் கம்பம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து கம்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மா மற்றும் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளர் செந்தில் முருகன் ஆகியோர் கடையில் சோதனை செய்தனர். இதில், கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் அட்டைப்பெட்டிக்கு தீவைத்துள்ளனர். அந்த தீ பரவியதில் மது பாட்டில்கள் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளன. இந்த தீயால் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்கு தீவைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story