பொக்காபுரம் பகுதியில் இறந்து கிடக்கும் குட்டியின் உடலை மீட்க சென்ற வனத்துறையினரை யானைகள் துரத்தின


பொக்காபுரம் பகுதியில் இறந்து கிடக்கும் குட்டியின் உடலை மீட்க சென்ற வனத்துறையினரை யானைகள் துரத்தின
x
தினத்தந்தி 11 Feb 2018 3:45 AM IST (Updated: 11 Feb 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

பொக்காபுரம் பகுதியில் இறந்து கிடக்கும் குட்டியின் உடலை மீட்க சென்ற வனத்துறையினரை யானைகள் துரத்தின.

மசினகுடி,

நீலகிரி வடக்கு வன கோட்டத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகம் பொக்காபுரம் பகுதியில் கடந்த 7-ந் தேதி ஒரு குட்டியானை இறந்து கிடந்தது. சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் சென்று குட்டி யானையின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் குட்டி யானையின் உடல் அருகே தாய் யானை உள்பட 2 யானைகள் நின்று கொண்டு வனத்துறையினரை குட்டி யானையின் உடலை அருகே யாரையும் நெருங்க விடவில்லை.

அதை தொடர்ந்து வனத்துறையினர் திரும்பி வந்தனர். தினமும் வனத்துறையினர் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மீட்ட சென்றபோது 2 யானைகளும் விரட்டின. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக சிங்காரா வனச்சரகர் காந்தன் உத்தரவின் பேரில் வனவர் பீட்டர்பாபு, வனக்காப்பாளர் கணேசன் மற்றும் வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் காலை 8 மணிக்கு சென்றனர். அப்போது குட்டி யானையின் உடல் மட்டும் இருந்தது.

இதையடுத்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது என்று எண்ணி வனத்துறை ஊழியர் ஒருவர் அங்குள்ள மரத்தில் ஏறி குட்டியானையின் உடலை புகைப்படம் எடுத்தார். இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபின் குட்டியானையின் உடலை அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் வனத்துறையினர் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து ஆக்ரோஷமாக யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. குட்டியின் உடல் அருகே நின்று கொண்டு இருந்த 2 யானைகளும் வனப்பகுதிக்குள் இருந்து வனத்துறையினரை நோக்கி ஓடிவந்தன. இதை பார்த்த வனத்துறையினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அந்த 2 யானைகளுடன் மேலும் ஒரு ஆண் யானையும் துரத்தியது. இதனால் வனத்துறையினர் குட்டியானையின் உடலை மீட்க முடியாமல் திரும்பி வந்தனர். 

Next Story