அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்


அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2018 3:15 AM IST (Updated: 11 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டது.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். விசைத்தறிக்கூடத்தில் இருந்து துண்டு, லுங்கி, வேட்டி உள்பட பல்வேறு துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் எடப்பாடி, குமாரபாளையம், சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசைத்தறி கூடங்கள் அனைத்தும் செயல்படாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, கூலி உயர்வை வலியுறுத்தி இன்று (நேற்று) முதல் நாங்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும் மீட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக வழங்கவேண்டும். அப்போதுதான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் கூறும்போது, ‘தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் தொழிலாளர்களிடம் கூலி உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மேலும் 2 நாட்களில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கான தீர்வு காணப்படும்’ என்றனர். 

Next Story