தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வலியுறுத்தல்


தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தென் மாவட்ட எம்.பி.க்கள் குரல் கொடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் மதுரை-விருதுநகர் இடையே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தென்மாவட்ட எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

அதிக கிராமப்பகுதி அடங்கிய தென் மாவட்ட மக்களுக்கு அதிநவீன மருத்துவ சேவை என்பது அரசு ஆஸ்பத்திரிகள் மூலம் கிடைக்காத நிலையே இருந்து வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்வதற்கும் பொருளாதார ரீதியில் வாய்ப்பு இல்லாத நிலையில் தென் மாவட்ட மக்கள் அரசு ஆஸ்பத்திரிகளை நம்பி தான் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தென் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க வேண்டியது அவசியம் ஆகும். அதுவும் அனைத்து வகைகளிலும் எளிதாக தென் மாவட்ட மக்கள் செல்லக்கூடிய வகையில் விருதுநகர்-மதுரை இடையே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதுதான் மிகவும் பயன்தரக்கூடியதாக இருக்கும்.

கடந்த 4 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் தொடங்குவதற்கு இடத்தை தேர்வு செய்ய மத்திய குழுவினர் பல்வேறு இடங்களை பார்த்து சென்ற பின்னர் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாகவே உள்ளன. தமிழக அரசை பொறுத்தமட்டில் சுகாதாரத்துறையினர் மதுரை மாவட்டம் தோப்பூர், தஞ்சை மாவட்டம் சிங்கிபட்டி, சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளையும் மத்திய குழுவினரை ஆய்வுக்காக அழைத்து சென்றனர். அதன் பின்னர் தமிழக அரசு எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டிய இடம் எது என்பதை உறுதியான முறையில் பரிந்துரை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைஅமைய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தென் மாவட்ட அமைச்சர்களும் வலியுறுத்தி கூறியபோதிலும் அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.

மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தமிழகத்தில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைவதற்கு வாய்ப்பு உள்ளதாக தன்னிடம் தெரிவித்ததாக பா. ஜனதா எம்.பி. இல.கணேசன் விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்த போது உறுதியாக தெரிவித்து சென்றார். ஆனாலும் இது பற்றி எவ்வித அறிவிப்பும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இருந்து வெளியிடப்படவில்லை.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கிளை அமைக்கப்படும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற 4 மாநிலங்களிலும் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் மத்திய அரசு கவனிக்காமல் விடுவது ஏன் என்று தெரியவில்லை. தமிழக அரசு இதில் போதுமான அழுத்தம் கொடுக்காதது தான் காரணமா என்று தெரியவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு காலாவதியாகிவிடும்.

எனவே பாராளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி மீண்டும் தொடர உள்ள நிலையில் தென் மாவட்ட எம்.பி.க்கள் இப்பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து இந்த கூட்டத்தொடரிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் தொடங்குவது குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அண்டை மாநில எம்.பி.க்கள் மத்திய அரசிடம் இருந்து தங்கள் மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்களுக்காக கடுமையாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழக எம்.பி.க்களும் மிக அத்தியாவசியமான எய்ம்ஸ் போன்ற அதிநவீன மருத்துவமனைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழக அரசும் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு வலியுறுத்தி தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் எய்ம்ஸ் போன்ற அதிநவீன மருத்துவமனை தொடங்குவதற்கு தென் மாவட்டங்களுக்கு அருகில் உள்ள தோப்பூர் போன்ற இடம் தான் மிக சரியான இடமாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

Next Story