பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு


பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் வீச்சு
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ளது கோரிப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தின் அருகே உள்ள ஆற்றங்கரையோரத்தை ஒட்டிய முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை அந்த வழியாக சென்றவர்களும், அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் கேட்டனர். இதையடுத்து அவர்கள் சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அங்கு முட்புதரில் துணியால் சுற்றப்பட்ட அழகான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தை பிறந்து சில மணி நேரமே இருக்கும். யாரோ பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தையை முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.

இது குறித்து துப்புரவு பணியாளர்கள் அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டாக்டர் அசோக்குமார், கிராம சுகாதார செவிலியர் சாந்தா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு அஞ்செட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தை நலமுடன் இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story