அகரம்சேரி பாலாற்றில் ரூ.1 லட்சம் நிதி திரட்டி சாலை அமைத்த பொதுமக்கள்


அகரம்சேரி பாலாற்றில் ரூ.1 லட்சம் நிதி திரட்டி சாலை அமைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

அகரம்சேரி ஊராட்சியில் பொதுமக்களே நிதி திரட்டி பாலாற்றில் சாலை அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் பாலமும் அமைத்துள்ளனர்.

அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவை அடுத்த அகரம்சேரி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியை சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஊராட்சிகள் உள்ளன. அகரம்சேரியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளிட்ட வேலைவாய்ப்பு தரும் தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இங்கிருந்து ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் போன்ற நகரங்களுக்கு செல்ல பாலாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். பாலாற்றில் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படும் நிலை இருந்து வருகிறது.

அந்த நாட்களில் பொதுமக்கள் மாணவ, மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று குடியாத்தம் வழியாக வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் அகரம்சேரி பாலாற்றில் பாலம் கட்டித்தரவேண்டும் என பல ஆண்டுகளாக இந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அகரம்சேரி ஊராட்சியை தத்தெடுத்து அனைத்து வசதிகளும் செய்து தருவதாக தெரிவித்தார். அப்போது அகரம்சேரி பாலாற்றில் பாலம் கட்டி தருவதாக உறுதியளித்தார். ஆனால் இன்று வரை அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்கள் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டது.

தற்போது பாலாற்றில் தண்ணீர் வற்றிப்போனதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளிகள் மாணவ, மாணவிகள் சென்று வர அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொழிலதிபர்களிடம் நிதி திரட்டி ரூ.1 லட்சம் செலவில் சுமார் 600 மீட்டர் தூரம் உள்ள பாலாற்றின் நடுவில் கிராவல் மண் கொட்டி சாலை அமைத்துள்ளனர். மேலும் ஆற்றில் தண்ணீர் செல்லும் இடத்தில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ராட்சத குழாய் அமைத்து சாலையை இணைத்துள்ளனர். அந்த சாலை வழியாக பஸ், வேன், கனரக வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story