தஞ்சையில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்


தஞ்சையில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை பாலாஜிநகர், ராம்நகர் மேற்கு மற்றும் கிழக்கு, மேலவாரி மற்றும் கீழவாரி ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 1 மாதத்துக்கும் மேல் குடிநீர் சரிவர வருவதில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரி மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குடிநீர் வராததால் அந்த பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை திடீரென தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் பாலாஜிநகருக்கு பிரிந்து செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அந்த வழியாக ஜீப்பில் சென்ற தஞ்சை ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் வாகனத்தில் இருந்து இறங்கி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன்பின்னர் அங்கு வந்த தஞ்சை தெற்கு போலீசார், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தஞ்சை மாநகராட்சி உதவி பொறியாளர் சந்திரபோஸ் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாலாஜி நகரில் ஆழ்குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை உடனடியாக சீர் செய்து அப்பகுதியில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். இதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story