சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,241 வழக்குகளுக்கு சமரச தீர்வு


சேலத்தில் மக்கள் நீதிமன்றம்: 1,241 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 11 Feb 2018 6:18 AM IST (Updated: 11 Feb 2018 6:18 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ஆயிரத்து 241 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

சேலம்,

நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒவ்வொரு மாதமும் கோர்ட்டில் நீண்டநாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மொத்தம் 5 ஆயிரத்து 199 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி குணவதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரவிச்சந்திரன், நீதிபதிகள் எழில், ராதாகிருஷ்ணன், இளவரசி, தங்கமணி, ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வுகள் கொண்ட குழுவினர் வழக்குகளை விசாரித்தனர். சேலம் மாவட்டத்தில் சேலம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் ஆகிய அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து மொத்தம் 19 அமர்வுகள் குழுவினர் நிலுவையில் உள்ள வழக்குகளை சம்பந்தப்பட்ட இருதரப்பினர் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.

சேலத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் படுகாயம் அடைந்த ராஜேஷ் கண்ணன் (வயது 23) என்ற வாலிபருக்கு இழப்பீடாக ரூ.15.35 லட்சத்திற்கான காசோலையை நீதிபதிகள் வழங்கினர். மொத்தம் 5 ஆயிரத்து 199 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 1,241 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது என்றும், இதன்மூலம் ரூ.12 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரத்து 881-க்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு பைசல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story