பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகிக்க திட்டம்


பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகிக்க திட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2018 6:23 AM IST (Updated: 11 Feb 2018 6:23 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியானது சுமார் 2137.92 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் நீர்பிடிப்பு பகுதிகளாக 834.5 ஏக்கர் உள்ளது. இந்த ஏரிக்கு வரட்டாறு, கூட்டாறு மற்றும் ஜருகுமலை காப்புகாடுகள் பகுதிகளில் இருந்தது நீர் வரத்து உள்ளது. ஒரு காலத்தில் சேலம் நகராட்சியாக இருந்தபோது, பொதுமக்களின் தாகம் தீர்க்க பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்துதான் குடிநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு, சீமைக்கருவேல மரங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு போனது. மேலும் நீர்வரத்து பாதைகளும் தடைப்பட்டு விட்டன.

பனமரத்துப்பட்டி ஏரியை நேற்று காலை நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் ஜி.பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஏரிக்கு வரும் நீர்வரத்து பாதைகள், தடைபட்டதற்கான காரணத்தை முழுமையாக அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்த ஏரிக்கான நீர்வரத்து பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரம், இத்தடுப்பணைகள் மூலம் பயன்பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை, அவர்களை பற்றிய முழு விவரங்களை சேகரித்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பனமரத்துப்பட்டி ஏரிக்கு நீர் வரத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 735 மில்லி மீட்டர் மழை பதிவாகி வருகிறது.

மேலும் இப்பகுதிகளில் உள்ள முக்கியமான மூலிகை தாவரங்களை பாதுகாத்து, சிறந்த இயற்கை சூழல் கொண்ட சுற்றுலாத்தலமாக்கிட தேவையான நடவடிக்கைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதற்கான பூர்வாங்க பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஏரிக்கான நீர்வரத்து பாதைகளை சீர்செய்து, நீர்வரத்துக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம் செய்வதற்கான திட்டமிடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், செயற்பொறியாளர் அசோகன், ரவி, காமராஜ், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story