நெஞ்சைத்தொட்ட நிஜ நாயகிகள்


நெஞ்சைத்தொட்ட நிஜ நாயகிகள்
x
தினத்தந்தி 11 Feb 2018 11:55 AM IST (Updated: 11 Feb 2018 11:55 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் பிரபலமாக விளங்கும் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் பலர் ஒரே நேரத்தில் சென்னையை மையமிட்ட நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது.

ந்தியாவில் பிரபலமாக விளங்கும் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் பலர் ஒரே நேரத்தில் சென்னையை மையமிட்ட நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது. தொடங்கியது முதல் நிறைவடையும் வரை அனைவரையும் நெகிழவைத்தது அந்த நிகழ்ச்சி. ஏன்என்றால் அவர்கள் விபத்துகளில் சிக்கி, மரணத்துடன் போராடியவர்கள். அவர்கள் போராடி மீண்டதை படங்களாக ஓடவிட்டபோது பார்வையாளர்கள் கண்கள் கலங்க, அடுத்த சில நிமிடங்களில் அவர் களது சாதனைகளை பட்டியலிட்டபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. ஊனத்தை வென்று அவர்கள் முன்னேறியதோடு மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டிகளாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த மாற்றுத்திறனாளிகளில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி மொகபத்ரா, மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கவுரி சேகர் காட்கில், ஜாஸ்மினா கன்னா, டாக்டர் ரோஷன் ஜாவத் ஷேக் போன்ற பெண்கள் பார்வையாளர்களின் நெஞ்சைத்தொட்ட நிஜநாயகி களாக மேடையில் தோன்றினார்கள். அவர்களில் கவுரி சேகர் காட்கில் குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு வந்து பரிசும், விருதும் பெற்ற சாதனையாளர்களான மாற்றுத்திறனாளிகளின் விவரம்!

டாக்டர் ஸ்ருதி மெகாபத்ரா: (புவனேஸ்வரை சேர்ந்தவர்)

இவர் சராசரி பெண்ணாக பிறந்து, பள்ளிப் பருவத்திலே விளையாட்டில் சாதனை படைத்துக்கொண்டிருந்தார். ஏராளமான கனவுகளோடு வலம் வந்த இவரது வாழ்க்கையில் திடீரென்று ஒரு விபத்து கோரத்தாண்டவம் ஆடிவிட்டது. மது போதைகொண்ட டிரைவர் ஒருவர் ஓட்டி வந்த வாகனம் இவர் மீது மோதி, குற்றுயிராக்கியது. மூட்டைபோல அள்ளி எடுத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். 32 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அந்த விபத்தில் இருந்து பல மாதங்கள் கழித்து இவர் மீண்டு வந்தாலும், இவரது வாழ்க்கை வீல் சேரில் முடக்கப்பட்டது. கால்களால் நடந்த இவர், வீல்களால் நகர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டபோதும் தனது சாதனை பயணத்தில் இருந்து பின்வாங்கவில்லை. படித்து முனைவர் பட்டம் பெற்றார். ஏராளமான புத்தகங்கள் எழுதினார். மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறார். மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியாக கற்பதற்கு வசதியாக அஞ்சலி என்ற கல்வித்திட்டத்தை உருவாக்கியுள்ளார். ஸ்வபிமான் என்ற அமைப்பையும் உருவாக்கி மாற்றுத்திறனாளி களுக்கு தொண்டு செய்து வருகிறார். இந்தியாவில் இவரை மாற்றுத்திறனாளி அரசி என்று குறிப்பிடு கிறார்கள்.

கவுரி சேகர் காட்கில்: (புனேயை சேர்ந்தவர்)

இவர் ‘டவுன் சின்ட்ரோம்’ என்ற மனவளர்ச்சிக் குறைபாட்டோடு பிறந்தவர். ஆனால் அதை ஒரு குறைபாடாக கருதாமல், பெற்றோரால் பல்வேறு துறைகளில் ஊக்குவிக்கப்பட்டார். நடனம், நீச்சல், நடிப்பு போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றார். விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். தேசிய அளவில் சிறந்த நீச்சல் வீராங்கனையாக தேர்வானார். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றார். பரதநாட்டிய கலைஞராகவும் பரிணமித்தார். ‘எல்லோ’ என்ற மராட்டிய திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். தேசிய அளவில் அதில் சிறந்த குழந்தை நட்சத்திரமாகவும் தேர்வானார்.

ஜாஸ்மினா கன்னா: (மும்பையை சேர்ந்தவர்)


கைகள், கால்கள், தலை போன்ற பகுதிகள் இயல்பாக இயங்க முடியாத நிலையில் இருப்பவர். வீல் சேரிலும் சரியாக அமர முடியாத இவர், கம்ப்யூட்டர்களை இயக்குவதில் தனித்திறனை வளர்த்திருக்கிறார். பத்தாம் வகுப்பில் கணக்குப் பாடத்தில் 100-க்கு 100 பெற்றவர். கல்லூரி படிப்பிலும் சாதனையாளராக திகழ்ந்துள்ளார். அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், சமூகவியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். சின்டெல் இந்தியா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தபடி இவர் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகிறார்.

டாக்டர் ரோஷன் ஜாவத் ஷேக்: (மும்பையை சேர்ந்தவர்)

16 வயதில் ரெயில் விபத்தில் சிக்கியவர். இரண்டு கால்களும் துண்டானது. இவரது தந்தை காய்கறி வியாபாரி. ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். விபத்தில் சிக்கிக்கிடந்தபோது இவரது கிராமத்து மக்கள், ‘அவ்வளவுதான்.. இவளது வாழ்க்கையே முடிந்தது’ என்றுகூறி கவலையோடு, கண்ணீர் விட்டிருக்கிறார்கள். ஆனால் இவரது தாயார், ‘கவலையை விடு.. கால்கள் இல்லாவிட்டாலும் உன்னால் சாதிக்க முடியும்’ என்று கூறி, நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார். அதனால் தனது பள்ளிப்பருவ கனவான டாக்டராகும் ஆசைக்கு இவர் புத்துயிர் கொடுத்து, கடும் முயற்சி எடுத்து படித்திருக்கிறார். ஆனால் டாக்டர் படிப்பிற்கு தேவையான மதிப்பெண்களை பெற்ற பின்பும், இவருக்கு படிக்க அனுமதி கிடைக்கவில்லை. ‘70 சதவீதத்திற்கு மேற்பட்ட ஊனத்தை இவர் கொண்டிருப்பதால் இவரால் டாக்டர் படிப்பை தொடர முடியாது’ என்று கூறி சேர்க்கைக்கு மறுத்திருக்கிறார்கள். உடனே இவர் நீதிமன்றத்தை நாடினார். இவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. மருத்துவ கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்பை பூர்த்தி செய்துவிட்டார். தற்போது மருத்துவ மேற்படிப்பிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்.

இவர்களது சாதனைகளை பாராட்டி பலத்த கரவொலிக்கு மத்தியில் ரொக்கப் பரிசும் ‘கேவின்கேர் எபிலிட்டி’ விருதும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், விழா அமைப்பாளர்களான சி.கே.ரங்கநாதன், ஜெயஸ்ரீ ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டார்கள். பல்வேறு பிரபலங்கள் விருதுகளை வழங்கினார்கள்.

பார்வையற்றோர்களுக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் மகந்தேஷ் கட்டிவலப்பாவும் விருது பெற்றார். பெங்களூருவை சேர்ந்த இவர் பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். கிரிக்கெட் வீரரான இவர், பார்வையற்றவர்கள் நலனுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார். புனேயை சேர்ந்த பிரபல மாற்றுத்திறனாளி கவிஞர் ராஜூ ராமேஸ்வர் உப்ரேடும் விருது பெற்றார்.

விருது பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதனைக்கு அம்மாக்களே காரணம் என் றார்கள். அம்மாக்கள் பட்ட கஷ்டங்களை உருக்கமாக விவரித்தார்கள். சிலர் அம்மாக் களோடு வருகை தந்திருந்தார்கள். வாய்பேச முடியாதவர்களும், பார்வையற்றவர்களும், ஊனமுற்றோர்களும் நிகழ்ச்சியில் திரளாக கலந்துகொண்டார்கள். வாய்பேச முடியாதவர்கள் நிகழ்ச்சியை புரிந்துகொள்ள வசதியாக முழு நிகழ்ச்சியும் சைகை மொழியால் விவரிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மகுடம் சூட்டியது இந்த விழா!

Next Story