இத்தாலி பெண்ணின் இதயத்தை கவர்ந்தபோது..


இத்தாலி பெண்ணின் இதயத்தை கவர்ந்தபோது..
x
தினத்தந்தி 11 Feb 2018 2:13 PM IST (Updated: 11 Feb 2018 2:13 PM IST)
t-max-icont-min-icon

காதல் ஒரு இனிய விபத்து. அது எப்போது - எப்படி ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. சாதாரண புன்னகையில் மலரும் நட்புகூட பிரிக்கமுடியாத காதலாகி விடும்.

காதல் ஒரு இனிய விபத்து. அது எப்போது - எப்படி ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. சாதாரண புன்னகையில் மலரும் நட்புகூட பிரிக்கமுடியாத காதலாகி விடும். அப்படி ஒரு ஆச்சரியமான காதல், இங்கே கடல் கடந்து கனிந்திருக்கிறது.

நாகர்கோவிலை சேர்ந்த சுப்பிரமணிக்கு வயது 35. என்ஜினீயரிங் படித்தவர். இவர் கால்பந்து வீரர். சீனாவில் வேலை பார்த்து வருகிறார். அன்று தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க சென்றிருக்கிறார். அங்குதான் இத்தாலி இளம் நங்கை பிலாவியா ஜீயநெல்லியை (வயது 30) சந்தித்திருக்கிறார். முதல் சந்திப்பு இருவருக்கும் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. எப்படி என்றால், ஒரு புத்தகத்தின் முகப்பு பக்கம் போல் அந்த முதல் சந்திப்பு அமைந்துவிட, அடுத்தடுத்து அவர்கள் சந்தித்துக் கொள்ள கிடைத்த வாய்ப்புகள் அடுத்தடுத்த பக்கங்களாக அமைந்துவிட, காதலர்களாகிவிட்டார்கள். நாகர்கோவிலில் குடும்பமும், நட்பும் சூழ திருமணம் செய்துகொண்டு, புத்தகத்தின் காதல் அத்தியாயத்தை நிறைவு செய்துவிட்டு, கல்யாண வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைத்திருக்கிறார்கள்.

தனது காதலின் சில பக்கங்களை சுப்பிரமணி நமக்காக திறக்கிறார்!

‘‘நான் சீனாவில் பணியாற்றி வருகிறேன். எனக்கு பல நாடுகளில் நண்பர்கள் இருக்கிறார்கள். என் நண்பர்கள் அனைவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அன்று சீனாவில் என் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றேன். அங்கே ஜீயநெல்லியை சந்தித்தேன். என் நண்பர் அவருக்கும் நண்பர். அதனால் அந்த விழாவுக்கு ஜீயநெல்லியும் வந்திருந்தார்.

நாங்கள் இருவரும் பார்த்த உடனேயே சகஜமாக பேசினோம். கால்பந்து விளையாடுவதும், நண்பர்களுடன் சைக்கிள் பயணம் செய்வதும் எனக்கு பிடித்தமானது. அந்த இரண்டுமே ஜீயநெல்லிக்கும் பிடிக்கும். எனவே எங்களுடன் அவரும் சைக்கிள் பயணம் வருவார். என்னுடன் கால்பந்தும் விளையாடி இருக்கிறார். ஜீயநெல்லி தன் குடும்பத்தினர் மீது அதிக அக்கறை வைத்திருப்பவர். அவர் ஒரு வெளிநாட்டு பெண் என்றாலும் அவருடைய பழக்கவழக்கம் அனைத்தும் இந்திய பெண் போன்றே இருக்கும். கலாசாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் நான் அவரை விரும்பினேன்.

அப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அவர் என்னிடம் வந்து, என்னை பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறினார். ஆணும், பெண்ணும் பழகி இருவரும் காதல் வசப்பட்டாலும் அந்த காதலை முதலில் கூறுவது நம் வழக்கப்படி ஆண்களாகத்தான் இருக்கும். அதிலிருந்து என் காதல் வித்தியாசமானதாகிவிட்டது.

ஜீயநெல்லி காதலை சொன்னதும் எனக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், சில கேள்விகளும் அப்போது எழுந்தன. அதாவது, என் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிப்பார்களா? இந்திய நாட்டு கலாசாரம் அவருக்கு ஒத்துவருமா? அவர் வேறு மதத்தை சார்ந்தவர் என்பதால் அவருடைய பெற்றோர் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் சிந்தித்தேன். அதனால் உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியாமல் தவித்தேன்.

இருந்தாலும் ஜீயநெல்லியை பிடித்திருந்ததால் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டேன். பின்னர் திருமணம் செய்து கொள்வது பற்றி இருவரும் கலந்து பேசினோம். இரு வீட்டாரும் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்.

என் குடும்பத்தில் அண்ணன் மற்றும் தங்கை இருவருமே காதல் திருமணம் தான் செய்துகொண்டனர். இதனால் என் காதலுக்கும் பெற்றோர் சம்மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பெற்றோரிடம் எங்கள் காதலை தெரிவித்தேன். என் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது போல் என் பெற்றோரும் எங்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி சம்மதம் தெரிவித்து விட்டனர். இதே போல் ஜீயநெல்லி பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக மணவாழ்க்கைக்குள் அடிஎடுத்துவைத்துவிட்டோம்’’ என்றார்.

ஜீயநெல்லி சொல்வதை கேட்போம்!

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இத்தாலியில். நானும் சீனாவில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு சுப்பிரமணியை பார்த்ததும் பிடித்தது. அதனால் அவரை காதலித்தேன். இந்தியாவில் திருமணத்தின்போது மணப்பெண் பட்டுச்சேலை உடுத்தி, மாலையும் கழுத்துமாக அழகாக தோன்றுவார்கள். அதைப் பார்க்கும்போது எனக்கும் இந்திய கலாசாரப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதை கூறினேன். சுப்பிரமணியும் உடனே சம்மதம் தெரிவித்து விட்டார். திருமணத்தின்போது கெட்டி மேளம் முழங்குவது ஏன் என்றும், வேதங்கள் ஓதுவது எதற்காக என்றும் எனக்கு தெரியாது. ஆனால் கெட்டி மேளம் அடித்ததும், வேதங்கள் ஓதியதும் கேட்கவும், பார்க்கவும் அழகாக இருந்தது. செண்டை மேளம் அடித்ததை பார்த்து வியந்தேன்.

மணப்பெண் அலங்காரத்தில் பட்டுச்சேலை உடுத்திக்கொண்ட போதும், கைகளில் மருதாணி வைத்துக்கொண்ட போதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாகர்கோவில் ஊர் மக்களோடும், உறவினர்களோடும் நான் சாதாரண தமிழ் பெண் போல் வாழ ஆசைப்படுகிறேன். அதற்காக தமிழ் பேச கற்று வருகிறேன். விரைவில் சகஜமாக தமிழ் பேசுவேன்’’ என்றார்.

Next Story