திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் சிறையில் அடைப்பு


திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:45 AM IST (Updated: 12 Feb 2018 12:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பூண்டி பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் திருவள்ளூரை அடுத்த ஒதப்பையை சேர்ந்த தசரதன் (வயது 32), அவரது மனைவி செண்பகவல்லி என்ற கனிமொழி (28) மற்றும் தசரதனின் சகோதரர் வெற்றி வீரபாண்டியன் (40) ஆகியோரை கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரும் கர்நாடக மாநிலத்தில் நவீன துப்பாக்கிகளை இயக்க பயிற்சி பெற்றவர்கள் என்பதும் செண்பகவல்லி கடந்த 2008-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டு தர்மபுரி நவீன் என்பவரிடம் ஆயுத பயிற்சி பெற்றவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கடந்த 2008-ம் ஆண்டு கொடைக்கானலில் மாவோயிஸ்டுகள் நடத்திய நாசவேலை தொடர்பாக செண்பகவல்லியை போலீசார் தேடி வந்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் தமிழகத்தில் எங்கு எல்லாம் தங்கி இருந்தனர். யார்? யாரிடம் தொடர்பு வைத்திருந்தனர். நாச வேலைக்கு திட்டமிட்டனரா? என்பது குறித்து தமிழக போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தசரதனின் சகோதரர் வெற்றி வீரபாண்டியன் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழக மக்கள் விடுதலை இயக்க உறுப்பினர் என்பதும், அவர் தனது சகோதரர் தசரதன் மற்றும் தசரதனின் மனைவி கனிமொழி ஆகியோர் மூலம் பூண்டி வனப்பகுதியில் கூட்டம் நடத்தி தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளான தசரதன், அவரது மனைவி கனிமொழி, வெற்றி வீரபாண்டியன் ஆகியோரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story