அ.தி.மு.க. எம்.பி.யின் அடையாள அட்டை நகலை காண்பித்து சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற டிரைவர் உள்பட 3 பேர் கைது


அ.தி.மு.க. எம்.பி.யின் அடையாள அட்டை நகலை காண்பித்து சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற டிரைவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2018 3:30 AM IST (Updated: 12 Feb 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே அ.தி.மு.க. எம்.பி.யின் அடையாள அட்டை நகலை காண்பித்து சுங்க கட்டணத்தை செலுத்தாமல் செல்ல முயன்ற டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிமங்கலம்,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாடூர் சுங்கச்சாவடி மையம் உள்ளது. நேற்று சுங்கச்சாவடி ஊழியர்கள் வழக்கம்போல் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மதியம் 12 மணி அளவில் சென்னையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த காரில் இருந்த டிரைவரிடம், சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்க கட்டணம் கேட்டுள்ளனர்.

அப்போது அந்த டிரைவர் காரில் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.பி. காமராஜ் இருப்பதாக கூறி, அவருடைய அடையாள அட்டையின் நகலை சுங்கச்சாவடி ஊழியரிடம் காண்பித்துள்ளார். இருப்பினும் கார் டிரைவர் மீது சுங்கச்சாவடி ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், காரில் எம்.பி. உள்ளாரா? என பார்வையிட்டார். அப்போது காரில் மேலும் 2 பேர் இருந்தனர். ஆனால் காமராஜ் எம்.பி. இல்லை.

இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் எம்.பி.யின் அடையாள அட்டை நகலை கொடுத்து கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார் டிரைவர் உள்ளிட்ட 3 பேரை பிடித்து வைத்துக் கொண்டு, தியாகதுருகம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, கார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை உள்அகரத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் சாலமோன் ராஜ் (வயது 31) என்பதும், அவருடன் வந்தவர்கள் கார் உரிமையாளர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் பாலாஜி(38), சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூரை சேர்ந்த பிச்சநாதர் மகன் சுரேஷ்(39) என்பதும் தெரியவந்தது. அவர்கள் காமராஜ் எம்.பி.யின் அடையாள அட்டை நகலை காண்பித்து வடசிறுவள்ளூரில் உள்ள சுரேசின் வீட்டுக்கு செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் (பொறுப்பு) சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் எம்.பி.யின் அடையாள அட்டை நகலை வைத்து சுங்க கட்டணம் செலுத்தாமல் பயணம் செய்து மோசடியில் ஈடுபட்ட சாலமோன் ராஜ், சுரேஷ், பாலாஜி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி அ.தி.மு.க. எம்.பி.யின் அடையாள அட்டை நகல் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story