‘விவசாயி உயர்ந்தால் தான் நாடு முன்னேறும்’ ப.சிதம்பரம் பேச்சு


‘விவசாயி உயர்ந்தால் தான் நாடு முன்னேறும்’ ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி உயர்ந்தால் தான் நாடு முன்னேறும் என்று காரைக்குடி அருகே நடைபெற்ற சாவித்திரி அம்மாள் குளிர்பதன பொருளக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் கூறினார்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே பூவாண்டிபட்டியில் சாவித்திரி அம்மாள் குளிர் பதன பொருளகத்தின் திறப்பு மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். குளிர்பதன பொருளகத்தின் உரிமையாளர் தொழில் அதிபர் பி.எல்.படிக்காசு வரவேற்றார். குளிர்பதன பொருளகத்தின் கட்டிடத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திறந்துவைத்தார். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. எந்திரங்களை தொடங்கிவைத்தார். பொருளகத்தின் 2-ம் தளத்தை முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். 3-ம் தளத்தினை சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அமலநாதனும், 4-ம் தளத்தை தொழில் அதிபர் செல்வராஜும் திறந்துவைத்தனர். இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் பாரதி புதுக்கணக்கினை தொடங்கிவைத்தார். முதல் வணிகத்தை பேராசிரியர் அயக்கண் தொடங்கிவைத்தார். அதனை முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ் பெற்றுக்கொண்டார்.

விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது:- இந்தியாவின் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு குளிர்சாதனம் என்பது கடந்த 15 ஆண்டுகளாக தான் கிடைக்கிறது. ஆனால் இன்று மனிதர்களை தாண்டி வெங்காயம், மிளகாய், தக்காளி உள்ளிட்ட காய்கறி, பழங்கள் போன்ற விளை பொருட்களுக்கும் குளிர்சாதன வசதி கிடைக்கிறது. அண்மையில் இந்திய அரசின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர். அதற்கு 2 நாட்களுக்கு முன்பு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் சமர்ப்பித்தார். அதில், இந்திய விவசாயிகளின் வருமானம் கடந்த 4 ஆண்டுகளாக கூடவில்லை. விவசாய உற்பத்தியும் மந்தநிலையிலேயே உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு விமோசனமாக குளிர்சாதன பொருளகம் அமைந்துள்ளது. இதனால் விளை பொருட்களை அவரசமாகவும், வந்த விலைக்கும் விற்க வேண்டிய அவசியமில்லை. அப்பொருளை குளிர்சாதன பொருளகத்தில் வைத்து பாதுகாத்து நல்ல விலை வரும்போது விற்கலாம். இதற்காக அரசு மானியம் வழங்குகிறது. விவசாயி உயர்ந்தால் தான் நாடு முன்னேறும். இனிமேல் விவசாயிகள் காய்கறி, பழங்களை பயிரிட வேண்டும். அவற்றை குளிர்பதன பொருளகத்தில் தேக்கி வைத்து நல்ல விலைக்கு விற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விழாவில் ராமசாமி எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்னாள் பொது மேலாளர் தேனப்பன், தமிழ்நாடு குளிர்பதன பொருளக உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மலிங்கம், செயலாளர் முகுந்தன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குளிர்பதன பொருளக உரிமையாளர்கள் பி.எல்.பி. பாலசுப்பிரமணியன், பி.எல்.பி.பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர். 

Next Story