தீவு பகுதியில் 5 வகை கடல் புறாக்கள்; ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் பறவைகள், வனத்துறை அதிகாரி தகவல்


தீவு பகுதியில் 5 வகை கடல் புறாக்கள்; ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் பறவைகள், வனத்துறை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தீவு பகுதியில் 5 வகை கடல் புறாக்களும், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் பறவைகள் உள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கோதண்டராமர் கோவில் கடல் பகுதி. இங்கு கடல் காவா, கடல் ஆலா, செங்கால் நாரை, நீர்க்காகம், கொக்குகள் மற்றும் பிளமிங்கோ பறவைகள் குவிந்துள்ளன. இதே போல் கோதண்டராமர் கோவில் பகுதியில் இருந்து எம்.ஆர்.சத்திரம், பாலம், கம்பிப்பாடு, அரிச்சல்முனை கடற்கரை வரை ஏராளமான கடல் புறாக்கள் குவிந்துள்ளன.

தனுஷ் கோடியை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்து நிற்கும் கடல் புறாக்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் தீவு பகுதியில் கடல் புறாக்கள் உள்பட சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது வனத்துறை நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதுபற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:-

ராமேசுவரம் தனுஷ்கோடி முதல், பாம்பன் குருசடைதீவு, மனோலிதீவு, சிங்கிலி தீவு வரை 2 நாட்கள் பறவையியல் ஆர்வலர்கள், வனத்துறை நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் தனுஷ்கோடி மற்றும் தீவு பகுதிகளில் 5 வகை கடல் புறாக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கடல்புறா மற்றும் கடல் ஆலாக்களையும் சேர்த்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவை தவிர விரால் அடிப்பான், நண்டு திண்ணி, கருநீலவால் பஞ்சுருட்டான், வெள்ளைஅரிவாள் மூக்கன், செந்நாரை, சாம்பல் நிற நாரை உள்ளிட்ட பலவிதமான பறவைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவைதவிர தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடல் பகுதியில் இந்த ஆண்டு பிளமிங்கோ பறவைகள் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததால் நீர் நிலை மற்றும் கண்மாய்களில் தண்ணீர் குறைவாக உள்ளதுடன் பல கண்மாய்கள் தண்ணீர் இல்லாமல் உள்ளதாலும், காஞ்சிரங்குடி, தேத்தாங்கால், சக்கரக்கோட்டை, சித்திரங்குடி,மேலசெல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலயத்தில் இந்த ஆண்டு பறவைகள் வரத்து மிகமிக குறைவாகவே உள்ளது. மாவட்டம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story