சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுரங்கப்பாதை: தண்டவாளத்தில் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம்


சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுரங்கப்பாதை: தண்டவாளத்தில் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2018 3:45 AM IST (Updated: 12 Feb 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

சுடுகாட்டுக்கு செல்லும் வழியை மறித்து சுரங்கப்பாதை அமைப்பதால், தண்டவாளத்தில் உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கதிரனம்பட்டி திருவள்ளுவர் நகர் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தால், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருவள்ளுவர் நகரில் இருந்து, சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை மறித்து ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த வழியாக கதிரனம்பட்டிக்கும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதைக்கும் இடையே சாலை உள்ளது.

அதில் புதிதாக கட்டப்படும் சுரங்கப்பாதையில் இருந்து கதிரனம்பட்டிக்கு செல்வதற்கு மட்டும் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திருவள்ளுவர்நகர் மக்களுக்கான சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சுவர் கட்டி மறைக்க போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுடுகாட்டுக்கு செல்ல பாதை ஒதுக்க வேண்டும் என்று திருவள்ளுவர்நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளிடமும், தென்னக ரெயில்வே உயர் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் திருவள்ளுவர்நகரை சேர்ந்த பழனிச்சாமி (வயது 50) என்பவர் நேற்று இறந்து விட்டார். அவருடைய உடலை அந்த வழியாக எடுத்து செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்தனர். இதனால் பழனிச்சாமியின் உடலை, திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாளத்தில் வைத்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை மறைக்காமல் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ரெட்டியார்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, சுரங்கப்பாதையை அடைத்து தடுப்பு சுவர் கட்டப்படாமல், சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை அமைத்து கொடுக்க ரெயில்வே அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து உடலை எடுத்து, சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் சுமார் ½ மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story