டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 685 பேர் எழுதினர் 6 ஆயிரத்து 463 பேர் வரவில்லை


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34 ஆயிரத்து 685 பேர் எழுதினர் 6 ஆயிரத்து 463 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இதில் 34 ஆயிரத்து 685 தேர்வு எழுதினர். 6 ஆயிரத்து 463 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அரியலூர்,

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து தேர்வு எழுத மொத்தம் 18 ஆயிரத்து 561 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 61 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். தேர்வை 15 ஆயிரத்து 550 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 11 பேர் தேர்வு எழுத வரவில்லை.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம், தனலட்சுமிசீனிவாசன் கல்லூரி வளாகத்தில் உள்ள தேர்வு மையம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் மேல்நிலைப் பள்ளிமையத்தையும், அரும்பாவூர், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்வு மையங்களில் எவ்வித குறுக்குவழி நிகழ்வுகளும் நடைபெறாதவாறு கண்காணித்திட 15 நடமாடும் குழுக்கள், 7 பறக்கும்படை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவிதங்களை தடுக்க காவலர்கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

அரியலூர் மாவட்டத்தில், இருந்து தேர்வு எழுத மொத்தம் 22 ஆயிரத்து 587 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டம் முழுவதும் 51 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்கு வந்தவர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர். தேர்வை 19 ஆயிரத்து 135 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 3 ஆயிரத்து 452 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க 9 பறக்கும் படைகள் மற்றும் 9 மொபைல் டீம் சோதனை அதிகாரிகள் உள்பட 65 பேர் பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையத்திற்குள் செல்போன் கால்குலேட்டர் போன்ற மின்னணு பொருள்கள் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு எழுதுபவர்கள் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து அந்தந்த வட்டத்திற்குள் அமைந்துள்ள தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. 

Next Story