ஊட்டி நகரின் குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது


ஊட்டி நகரின் குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது
x
தினத்தந்தி 12 Feb 2018 3:15 AM IST (Updated: 12 Feb 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகரின் குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்தது.

ஊட்டி,

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மலைகளின் அரசியான ஊட்டிக்கு கடந்த ஆண்டு 29 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஊட்டியில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், குடியிருப்புகள் உள்ளன. சுற்றுலா நகரமான ஊட்டியின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன. அதில் குறிப்பாக பார்சன்ஸ்வேலி அணை, மார்லிமந்து அணை, கோடப்பமந்து அப்பர் அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்கிறது. கடந்த ஆண்டு ஊட்டியில் போதிய அளவு மழை பெய்ததால் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை ஆகிய அணைகளில் தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது.

ஊட்டியில் மழை பெய்யும்போது வனப்பகுதிகள் மற்றும் நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் அணைகளில் சேருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. ஊட்டி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் பார்சன்ஸ்வேலி அணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 44 அடிக்கு தண்ணீர் இருந்தது.

இந்த அணை நீர் மின்சார உற்பத்திக்காக எமரால்டு அணைக்கு திறந்து விடப்பட்டதால், அதன் நீர்மட்டம் 10 அடி குறைந்து தற்போது 34 அடியாக உள்ளது. தொட்டபெட்டா லோயர் அணை நிரம்பி காணப்படுகிறது. டைகர்ஹில் அணை உள்பட மற்ற அணைகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். இந்த சீசனில் சுற்றுலா பயணிகளுக்காக கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தற்போது அணைகளில் உள்ள தண்ணீர் இருப்பை காணும்போது, கோடை சீசனுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி கூறியதாவது:-

தற்போது ஊட்டியில் உள்ள அணைகளில் நீர் இருப்பு போதிய அளவு இருக்கிறது. பார்சன்ஸ்வேலி அணையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய தேவையான அளவு குடிநீர் உள்ளது. ஊட்டியில் பார்சன்ஸ்வேலி 3-வது குடிநீர் திட்ட பணிகள் அடுத்த (மார்ச்) மாதம் முடிவடையும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் மூலம் கோடை சீசனில் ஊட்டி நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி வினியோகம் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story