திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்படும் ராஜகோபுர நுழைவுவாயில் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்படும் ராஜகோபுர நுழைவுவாயில் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Feb 2018 3:15 AM IST (Updated: 12 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்படும் ராஜகோபுர நுழைவுவாயில் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபுரம் அமைக்கும் பணி தொடங்கி நிறைவடையாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழு நிலைகளை கொண்ட 120 அடி உயரமுடைய ராஜகோபுரம் கட்ட ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

அப்போது கோவில் திருவிழாவின்போது சாமிகளை ஏற்றி செல்லும் வகையில் ராஜகோபுரத்தின் நுழைவுவாயில் 10 அடி அகலத்தில் அமைக்க வேண்டும் என திருவிழா நடத்தும் உற்சவதாரர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று தலைமை ஸ்தபதி முத்தையா, தலைமை கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் 10 அடி அகலத்தில் நுழைவுவாயில் அமைக்க ஒப்புதல் வழங்கினர்.

இந்நிலையில் நேற்று காலை ராஜகோபுரத்தில் 8½ அடி அகலத்தில் நுழைவுவாயில் அமைக்க கோவில் செயல் அலுவலர் கன்யா தலைமையில் அறநிலையத்துறையினர் வந்தனர். இதையறிந்த உற்சவதாரர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.

இவர்கள், சாமிகளை ஏற்றிச்செல்லும் சகடை வாகனம் 8 அடி அகலம் கொண்டது. அலங்காரம் செய்து பக்தர்கள் கொண்டு செல்லும்போது தடையாக இருக்கும், எனவே ராஜகோபுர நுழைவுவாயில் அளவு 9.5 அடி அகலமாவது இருந்தால்தான் விழாக்காலங்களில் சாமிகளை சகடை வாகனங்களில் எளிதாக கொண்டு செல்ல முடியும், இதனை மாற்றி அமைத்தால் சாமி செல்ல முடியாது என்று கூறியதோடு நுழைவுவாயில் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உற்சவதாரர்கள், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படாததால் இதுசம்பந்தமாக உயர்அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்பட்ட பிறகு ராஜகோபுர நுழைவுவாயிலை அமைத்துக்கொள்ளலாம் என்றும், அதுவரை தற்காலிகமாக இந்த பணியை நிறுத்தி வைக்குமாறு போலீசார் கூறினார்கள்.

இதனையடுத்து கோவில் ராஜகோபுர நுழைவுவாயில் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அதிகாரிகள் மற்றும் உற்சவதாரர்கள், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story