கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்


கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் - பாரதீய ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:15 AM IST (Updated: 12 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் லாஸ்பேட்டை தொகுதி செயற்குழு கூட்டம் தொகுதி தலைவர் சந்துரு தலைமையில் நடந்தது. தொகுதி பொதுச்செயலாளர்கள் பாலாஜி, பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட தலைவர்கள் சிவானந்தம், மோகன்குமார், மாநில செயலாளர் ஜெயந்திர, மகளிர் அணி லதா, கனகவள்ளி, கல்விக்கரசி, மற்றும் நிர்வாகிகள் கவுரிசங்கர், வெங்கட்ரமணி, ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

லாஸ்பேட்டை தொகுதி முழுவதும் தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எரியாத தெருமின் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

ஆரம்ப சுகாதார மையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து 24 மணிநேரமும் செயல்படுத்திடவும், ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும். கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அங்கன்வாடிகளுக்கு அரசு சொந்த கட்டிடம் கட்டிதர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அசோக் நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக வீட்டுவசதி வாரிய இடத்தில் குடியிருப்போருக்கு இலவச மனைப்பட்டா வழங்க அரசு உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெத்துசெட்டிபேட்டை கொள்ளிமேடு மைதானத்தை அரசு கையகப்படுத்தி சிறுவர்கள் பயன்படுத்தும் விதமாக சிறுவர் பூங்கா அமைக்கவேண்டும். தொகுதி முழுவதும் காவல் ரோந்து வாகனம் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

லாஸ்பேட்டை தொகுதியில் அனைத்து நகர்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story