மறவபட்டி, அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 67 பேர் காயம்


மறவபட்டி, அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 67 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Feb 2018 3:00 AM IST (Updated: 12 Feb 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

மறவபட்டி மற்றும் அய்யம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 67 பேர் காயம் அடைந்தனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவை அடுத்த மறவபட்டியில் புனித பெரிய அந்தோணியார் தேர்த்திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு காலை 9 மணிக்கு தொடங்கியது. திண்டுக்கல் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு தாசில்தார் மிருணாளினி கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அலங்காநல்லூர், பாலமேடு, திருச்சி, விராலிமலை, மணப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புகையிலைப்பட்டி, கொசவபட்டி, முத்தழகுபட்டி, மைக்கேல்பாளையம், தவசிமடை, பஞ்சம்பட்டி உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 400 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன.

காளைகளை அடக்க 300 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் மல்லுக்கட்டினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் துள்ளிக் குதித்து சென்றன. மேலும் வீரர்களை பந்தாடின. இருப்பினும் வீரர்கள் சளைக்காமல் காளைகளை அடக்கினர். சில காளைகளின் பெயரை அறிவித்தவுடன் வீரர்கள் தடுப்பு கம்பியில் ஏறிக் கொண்டனர்.

வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் காளையர்கள் போட்டி போட்டு காளையை அடக்க முயன்றனர். பார்வையாளர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் வீரர்களை உற்சாகப்படுத்தினர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்கம் மற்றும் வெள்ளிக்காசுகள், பட்டு சேலைகள், பீரோ, சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, எவர்சில்வர் பாத்திரம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.

பரபரப்பாக நடந்த இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 18 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காத வண்ணம் தடுக்க திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோபால், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் ஏழைகாத்தம்மன் ஸ்ரீ வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக் கட்டு நடைபெற்றது. இதனை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க 450 மாடு பிடி வீரர்கள் எடை, உயரம், பார்வை, காயங்கள் போன்ற மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வாடிவாசல் திறந்து முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், அலங்காநல்லூர், சிவகங்கை, விருதுநகர், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமார் 600 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து வந்தன.

இந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் துள்ளிக்குதித்து பாய்ந்து சென்றது. சில காளைகள், மாடுபிடி வீரர்களை பந்தாடியது. அடங் காத காளைகளுக்கும், அடக் கிய மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ, கட்டில், எவர்சில்வர் பாத்திரம், தங்ககாசுகள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 49 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அலங்காநல்லூர் அஜித் (வயது 19), வீரமணி (24), மதுரை முத்துராமர் (21), மணிகண்டன் (31) ஆகிய 4 பேருக்கும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு செய்தார். விழாவில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story