லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டார்.

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் ப.தனராஜன் (வயது 54). இவர், மணல் கடத்தும் நபர்களிடம் இருந்து மாதம் தோறும் மாமூல் வாங்கிக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவிப்பதாக தொடர்ந்து புகார்கள் சென்றது.

இந்த நிலையில் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த செங்கல் சூளை அதிபர் பன்னீர்செல்வம் (41) என்பவரை துணை போலீஸ் சூப்பிரண்டு தனராஜன், அழைத்து லாரியில் மணல் ஓட்ட தனக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என மிரட்டினார். இதனை வசூல் செய்ய ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து ஜெயராஜ் (51) என்பவரை பேரம் பேச நியமித்துள்ளார்.

அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் லூர்து ஜெயராஜ், லாரி உரிமையாளர் பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரமும், தனக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென கூறியதை தொடர்ந்து பன்னீர்செல்வம் வேலூர் லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்தார்.

அதன்பேரில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துஜெயராஜிடம் ரூ.25 ஆயிரமும், தனராஜனுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொடுத்தபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் லூர்துஜெயராஜை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story