18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் டி.டி.வி.தினகரன் பேச்சு


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஆட்சி மாற்றம் நிகழும் டி.டி.வி.தினகரன் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஒரத்தநாடு,

டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈச்சங்கோட்டை, செல்லம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒரத்தநாடு பகுதி எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க. கோட்டையாக உள்ளது. ஆனால் கடந்த 2016-ம் அண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு காரணம் துரோகம் செய்தவரை நீங்களே முதலில் தெரிந்து கொண்டு அவரை தோற்கடித்தீர்கள். நான் பிறப்பதற்கு முன்பே 1962-ம் ஆண்டு எம்.ஜி.ஆரால் வேட்பாளராக நிறுத்தப்பட்ட துரை.கோவிந்தராஜன் போன்றோர் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள்.

ஆனால் சசிகலாவால் ஜெயலலிதாவிடம் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை சட்டமன்ற உறுப்பினர், இருமுறை அமைச்சராகவும் பதவி வழங்கப்பட்ட ஒருவர் கட்சியின் பொதுக்குழுை-வை கூட்டி சசிகலாவை நீக்குவோம் என கூறி வளர்த்து விட்டவர்களுக்கே துரோகம் செய்தார். இதனால் தான் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியிலிருந்து முதல் நபராக அவரை நான் நீக்கினேன்.

33 வருடங்கள் ஜெயலலிதாவிற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் சசிகலா. அவரது வாழ்விலும்-தாழ்விலும் நாங்கள் பங்கு கொண்டோம். சசிகலா நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த உடனேயே முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் பதவி சுகத்தை விரும்பவில்லை. இதற்கு மாறாக பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டனர். தமிழ்நாட்டு மக்கள் துரோகத்திற்கு எப்போதும் இடமளிக்க மாட்டார்கள். இதனால்தான் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டனாகிய என்னை அங்கீகரித்து வெற்றி பெற வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை பாதுகாக்க போராடிய 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இந்த வழக்கில் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். அதன்பிறகு தமிழகத்தில் உண்மையான ஜெயலலிதா ஆட்சி அமையும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இந்த பகுதியின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுப்போம். இதற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் அணி அமைப்பு செயலாளர் துரை.கோவிந்தராஜன், பொருளாளர் ரெங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ்கண்ணன், ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் தினகரன் முன்னிலையில் இணைந்தனர். இதனை தொடர்ந்து பாப்பாநாடு, தொண்டராம்பட்டு, ஒக்கநாடுகீழையூர், நெய்வாசல் ஆகிய பகுதிகளில் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். 

Next Story