கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆய்வு


கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆய்வு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:00 AM IST (Updated: 12 Feb 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம், பட்டமங்கலம், தேவூர், வெண்மணி, சாட்டியக்குடி, வலிவலம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் இதுவரை 1,004 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் 76 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் என மொத்தம் 1,080 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 18 ஆயிரத்து 746 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நெல் கொள்முதல்

ரூ.120 கோடி வரை விவசாயிகளின் வங்கி கணக்கில் மின்னணு பரிமாற்ற முறையில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5 கோடியும் அடங்கும். இந்த ஆண்டு சுமார் 15 முதல் 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Next Story