மும்பையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்


மும்பையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்
x
தினத்தந்தி 12 Feb 2018 4:38 AM IST (Updated: 12 Feb 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து மாநிலம் முழுவதும் விரைவில் ‘மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ்’ அறிமுகப்படுத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மருத்துவ உதவியாளர் ஒருவருடன் இயங்கும் இந்த மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் நுழைய முடியாத சந்துபொந்துகளில் கூட சென்று பலருக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவரும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுக்கு மும்பையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஜனவரி 31-ந் தேதிவரை மட்டும் 186 விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 28 பிரசவ சம்பந்தமாக அவசர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கும், 1,270 அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கும் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் உதவி கிடைத்துள்ளது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த் கூறியதாவது:-

மும்பையில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு கிடைத்துவரும் அபரிமிதமான ஆதரவை கருத்தில் கொண்டு கூடுதலாக 30 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில் 10 ஆம்புலன்சை மும்பையிலும், 20 ஆம்புலன்சை ஜவகர், மோகாதா, நத்தூர்பர் மற்றும் மேல்காத் பகுதிகளிலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். மேலும் மலைவாச ஸ்தலங்களுக்கும், பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கும் இந்த சேவையை அறிமுகம் செய்ய உள்ளோம்.

மும்பையின் பெரும்பாலான பகுதிகள் குறுகலான சந்துகளையும், ரெயில்வே பாதை தடங்களும் கொண்டவையாகும். இந்த பகுதிகளில் நான்கு சக்கர ஆம்புலன்ஸ் செல்வது கடினம். ஆனால் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மூலம் எளிதில் அங்கு சென்று தேவையான மருத்துவ உதவியை செய்யமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story