இளம்பெண் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் மனு


இளம்பெண் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 13 Feb 2018 3:00 AM IST (Updated: 13 Feb 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த செல்வி(வயது27) என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது சகோதரர் ஜோதிராஜன் ( 33) நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டர் சிவஞானத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரி செல்வியைபாலியல்பலாத்காரம் செய்ய முயன்ற புகாரின் பேரில் கடந்த 1.3.2015 தேதி சூலக்கரை போலீஸ்நிலையத்தில் எனவர்சாமி என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு அந்தவழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இந்தவழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி எனவர்சாமி எனது சகோதரியையும், தந்தையையும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்தநிலையில் மீண்டும் கடந்த 23.12.2017 அன்று இரவு எங்கள் வீட்டிற்கு வந்து செல்வியைபாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் சத்தம் போடவே அவரை பிடித்து சூலக்கரை போலீசில் ஒப்படைத்தோம்.

போலீசார் அவர் மீது மறுநாள்வழக்கு போடுவதாக சொன்னார்கள். அடுத்தநாள் போலீஸ்நிலையத்துக்கு சென்ற போது போலீசார் எனவர்சாமி மீது கொடுத்த புகாரை வாபஸ்வாங்க கூறி மிரட்டினர். இதனால் நாங்கள் போலீஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிவிட்டோம். இது பற்றி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தோம். அவரும் உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.ஆனால் 2 நாள் கழித்து நாங்கள் எனவர் சாமியை தாக்கியதாக எங்கள் மீதே வழக்குபதிவு செய்யப்பட்டது. நாங்கள் முன் ஜாமீன் பெற்று போலீஸ்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தோம். போலீஸ்நிலையம் செல்லும் போதெல்லாம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எங்களை மிரட்டி வந்தனர். தொடர்ந்து கடந்தமாதம் 19-ந்தேதி எங்கள் வீட்டுக்கு விசாரணைக்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த எனது சகோதரியை மிரட்டினர். அதனை தொடர்ந்து தான் என் சகோதரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

எனவேசம்பவம் குறித்து முறையானவிசாரணை நடத்தி சூலக்கரை போலீஸ்இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் மீதும், விருதுநகர் ஒன்றியஅ.தி.மு.க. மகளிர் அணி பிரமுகர் மீதும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மீது போடப்பட்ட உண்மைக்கு புறம்பான வழக்கை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story