மணல்திட்டை அகற்றி விட்டு, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்


மணல்திட்டை அகற்றி விட்டு, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாட்டில் மணல்திட்டை அகற்றி விட்டு, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உடன்குடி,

உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டில் இயற்கையாக அமைந்த மணல் குன்றின் மீது திருச்சிலுவை ஆலயம் உள்ளது. இந்த மணல் குன்றின் தென்புறம் கடல் அலைகள் சீற்றத்துடனும், வடபுறம் கடல் அலைகள் குறைந்தும் காணப்படுகிறது. இங்கு புனித சவேரியார் வாழ்ந்த குகையும், கலங்கரை விளக்கும் உள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மணப்பாட்டில் தேசிய கடல் அலைச்சறுக்கு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

இங்கு மீனவர்கள் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் மணல்குன்றின் வடபுறம் கடலின் நடுவில் நீண்ட மணல் திட்டு உருவாகி உள்ளது. இதனால் மீனவர்கள் படகுகளை மணல்திட்டு வழியாக இழுத்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மீனவர்கள் டிராக்டர்களை வாடகைக்கு அமர்த்தி, அதில் கயிறு கட்டி, படகுகளை கடலுக்கு இழுத்து சென்று வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், மணப்பாடு கடலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய மணல்திட்டாக இருந்தது. தற்போது நீண்ட தூரத்துக்கு மணல்திட்டு உருவாகி விட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் மணல்திட்டை அகற்றினாலும், சில நாட்களில் அங்கு மீண்டும் மணல் திட்டு உருவாகிறது. மேலும் மணல்திட்டில் டிராக்டர் மூலம் கயிறு கட்டி படகை இழுத்து செல்வதால், படகின் அடிப்பகுதி தேய்ந்து சேதம் அடைகிறது.

மேலும் ஒவ்வொரு படகையும் கடலுக்கு இழுத்து சென்று வருவதற்கு டிராக்டர் வாடகை கூலியாக ரூ.200 வழங்க வேண்டி உள்ளது. எனவே மணப்பாடு கடலில் உருவாகி உள்ள மணல்திட்டை முழுவதும் அகற்றி விட்டு, அங்கு மீண்டும் மணல் திட்டு உருவாகாத வகையில், தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Next Story