கடலூர் அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்- முன்னாள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் திடீர் மோதல்


கடலூர் அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்- முன்னாள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் திடீர் மோதல்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத்- முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆதரவாளர்கள் திடீரென மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரெட்டிச்சாவடி,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. இதற்கிடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டனர்.

அதன்பிறகு 2 அணிகளிலும் மேல்மட்ட தலைவர்கள் இணைந்தாலும், பல மாவட்டங்களில் நிர்வாகிகள் மனரீதியாக இணையவில்லை. கடலூர் மாவட்டத்திலும் இந்த நிலை நீடித்து வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசி, எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யாபன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் அரசு விழாவிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்வதில்லை. அமைச்சருக்கு எதிராகவும், அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் கை கோர்க்கவில்லை.

இதற்கிடையில் கடந்த 10-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது பற்றி கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாரதிசாலையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் அவைத்தலைவர் அய்யப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இருப்பினும் அமைச்சர் எம்.சி.சம்பத் அந்த கூட்டத்தை நடத்தி, உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், கடலூர் நகராட்சி 45 வார்டுகளில் உள்ள நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை நேற்று முன்தினம் வழங்கினார்.

இந்த நிலையில் கடலூர் வடக்கு ஒன்றிய பகுதிகளுக்கு மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் தலைமையில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ரெட்டிச்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அவைத்தலைவர் அய்யப்பன் ஆதரவாளர்கள் அந்த மண்டபத்தின் முன்பு திரண்டனர்.

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளரான முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை தலைமையில் அ.தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர். அப்போது மண்டபத்துக்கு வந்த அய்யப்பனிடம், அமைச்சரின் ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சியில் எங்களை கலந்து கொள்ள ஏன்? எங்களை அழைக்கவில்லை என்று கேட்டனர்.

அதற்கு அய்யப்பனின் ஆதரவாளர்கள், இது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி, யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், விண்ணப்பத்தை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என்றனர்.

அப்போது அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், அய்யப்பனின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி இரு ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒருவரையொருவர் நெட்டித்தள்ளிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர். பின்னர் அமைச்சரின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன், புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியிலும், கட்சியினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கடலூர் தெற்கு ஒன்றிய பகுதியான திருவந்திபுரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்குவதற்காக மாவட்ட அவைத்தலைவர் அய்யப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சென்றனர். அப்போது அமைச்சரின் ஆதரவாளரான ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள், அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தினர். மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் இல்லாமல் எப்படி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கலாம் என்று கூறி அய்யப்பன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அய்யப்பன் தரப்பினர், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் தான் வழங்க வேண்டும் என்பது இல்லை. யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறினர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், இருதரப்பின ரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Next Story