27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கான நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்


27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கான நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கான நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை, கல்வி கடனுதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் தர்மபுரி ஒன்றியம் செட்டிக்கரை ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் எங்கள் கிராமத்தை சேர்ந்த 105 பேருக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த பட்டாக்களுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்காமல் வருவாய்த்துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். வாழ்வாதாரமே கேள்விகுறியாக உள்ள எங்களின் குடும்பங்களுக்கு வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுக்கு உரிய பட்டாவுக்கான இடத்தை உடனடியாக அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அரிச்சந்திரன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில் எங்களது தெருவில் உள்ள வீடுகளின் முன்பு ஒருசில குடியிருப்பு வாசிகள் தெருவை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி உள்ளனர். மேலும் பலரது வீடுகளின் முன்பு சாக்கடைகள் மீது கட்டிடங்களை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் எப்போதும் நெருக்கடியான சூழ்நிலையில் அந்த வழியாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அரிச்சந்திரன் கோவில் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தெருவில் வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story