மறைத்து வைத்துள்ள காசோலைகளை பறிமுதல் செய்வதற்காக துணைவேந்தர் கணபதியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


மறைத்து வைத்துள்ள காசோலைகளை பறிமுதல் செய்வதற்காக துணைவேந்தர் கணபதியிடம் 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச குற்றச்சாட்டில் கைதான துணைவேந்தர் கணபதி, மறைத்து வைத்துள்ள 4 காசோலைகளை பறிமுதல் செய்வதற்காக அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை கோர்ட்டு நீதிபதி ஜான்மினோ அனுமதி வழங்கினார்.

கோவை,

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கிய துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த 3-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

உதவிபேராசிரியர் சுரேஷ் என்பவர்,தன்னை பணிநிரந்தரம் செய்ய ரூ.30 லட்சம் கேட்பதாக அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய 1 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அனுப்பி துணை வேந்தர் கணபதியை கையும், களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்தனர். துணைவேந்தரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் லஞ்ச ஒழிப்பு விசாரணை சிறப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று நீதிபதி ஜான் மினோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கணபதி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி ஜான்மினோ முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது கோர்ட்டில் நடைபெற்ற விவாத விவரம் வருமாறு:-

நீதிபதி:- போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்துள்ளனர். நீங்கள் இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?

கணபதி:- நான் ஏற்கனவே விசாரணையில் விவரங்களை தெரிவித்துவிட்டேன். எனவே போலீஸ் காவலில் விசாரணைக்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சி.ராஜேஷ், துணைவேந்தர் மற்றும் தர்மராஜ் பிடிபட்டது குறித்த சத்திய பிரமாண வாக்குமூலத்தை நீதிபதி முன்னிலையில் அளித்தார். துணை சூப்பிரண்டு ராஜேஷ் அளித்த சத்திய பிரமாண வாக்குமூல விவரம் வருமாறு:-

உதவி பேராசிரியர் டி.சுரேஷ் கடந்த 1.2.2018 அன்று எங்களிடம் புகார் செய்தார். துணைவேந்தர் கணபதி, வேதியியல்துறை தலைவர் தர்மராஜ், தொலை தூர கல்வி இயக்குனர் மதிவாணன் ஆகியோர் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பதாக அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சம் கேட்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கையும், களவுமாக அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிப்ரவரி 12-ந்தேதி, மார்ச் 2ந்தேதி, மே 12-ந்தேதி, ஜுலை மாதம் ஆகிய முன்தேதியிட்ட 4 காசோலைகளையும், ரூ.1 லட்சம் பணத்தையும் சுரேஷ் அவர்களிடம் கொடுத்தார். கொடுக்கும் முன்பு காசோலைகளின் எண்கள் மற்றும் 1 லட்சம் பணத்துக்கான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 50 ஆகியவற்றின் வரிசை எண்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்பு போலீசாரினால் பதிவு செய்யப்பட்டு அதன்பின்னர் புகார்தாரர் சுரேசிடம் கொடுத்தனுப்பப்பட்டது.

2-வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தர்மராஜ் கேட்டுக்கொண்டதன்பேரில், துணைவேந்தரின் பங்களாவுக்கு பணம் மற்றும் காசோலைகளுடன் சுரேஷ் சென்றார். ரூபாய் நோட்டுகளில் நாப்தலின் என்ற ரசாயன பொடியும் தடவி கொடுக்கப்பட்டது. துணைவேந்தர் முன்னிலையில், அவருடைய மனைவி சொர்ணலதாவிடம் 4 காசோலைகளையும், ரூ.1 லட்சம் பணத்தையும் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று கையும்,களவுமாக அவர்களை பிடித்தனர்.

அப்போது சொர்ணலதா கழிவறைக்கு சென்று தாழிட்டு, கழிவறை பேஷனுக்குள் ரூபாய் நோட்டுகளை கிழித்து உள்ளே போட்டு தண்ணீரை ஊற்றி தடயத்தை அழிக்க முயன்றார்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கீதா, விஜயலட்சுமி ஆகியோர் விரைந்து சென்று கதவை தட்டி திறக்க வைத்தனர். சொர்ணலதாவின் ஜாக்கெட்டுக்குள் இருந்து 22 இரண்டாயிரம் நோட்டுகளை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பறிமுதல் செய்தனர். இளநிலை உதவிப்பொறியாளர்கள் துரைபாண்டியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், பிளம்பர் மாதவன், துப்புரவு தொழிலாளி ராஜா ஆகியோர் கழிவறையை உடைத்து, குழாய் மற்றும் கழிவுநீர் தொட்டிக்குள் கிழிந்த நிலையில் இருந்த 28 எண்ணிக்கையில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மீட்டு கொடுத்தனர். இவை காய வைக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றுஒட்டப்பட்டு வழக்கிற்கு ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தில் ரசாயன பொடி தடவப்பட்டு இருந்ததால், துணைவேந்தர் சொர்ணலதாவின் கைகளும், ஆடைகளும் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதன் மூலம் அவர் லஞ்ச பணத்தை பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரமான 4 காசோலைகள் அவரது வீட்டில் இருந்து இன்னும் கண்டெடுக்கப்படவில்லை. இதுகுறித்து துணைவேந்தரிடம் கேட்டபோது, காசோலை வாங்கியதை மறுக்கவில்லை. ஆனால் அந்த காசோலைகள் வீட்டில் எங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்க மறுக்கிறார். எனவே இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டியது இருப்பதால் அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தை துணைசூப்பிரண்டு ராஜேஷ் அளித்தார். அரசு தரப்பு வக்கீல் சிவக்குமாரும் இதற்கு அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரினார்.

துணைவேந்தர் கணபதி தரப்பில் மூத்தவக்கீல் ஞானபாரதி ஆஜர் ஆகி வாதாடும்போது கூறியதாவது:-

அரசு தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அபிடவிட்(பிரமாண பத்திரம்) முறையாக இல்லை. கைதான அன்று தாக்கல் செய்த ஆவணத்தில் காசோலைகள் பற்றி சரியாக குறிப்பிடவில்லை. என்னென்ன காரணங்களுக்காக காவலில் எடுத்து விசாரிக்க போகிறார்கள் என்பதையும் பிரமாணபத்திரத்தில் தெளிவாக குறிப்பிடவில்லை.

துணைவேந்தர் வீட்டில் 16 மணிநேரம் சோதனை நடத்தியபோது காசோலைகளை கைப்பற்றவில்லை. அதன்பிறகு வீட்டை திறந்து போட்டு விட்டு வந்து விட்டனர். வீட்டை சீல் வைக்கவும் இல்லை. இவ்வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. போலீஸ் காவலில் விசாரிக்கும்போது மட்டும் காசோலைகள் பற்றி எப்படி தெரியவரும்? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிரமாண பத்திரம் தவறாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இதனை ஏற்றுக்கொள்ள கூடாது. துணைவேந்தரை ஒரு நிமிடம் கூட போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க கூடாது. அதற்கான முகாந்திரமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அரசு வக்கீல் சிவக்குமார் வாதாடுகையில், துணைவேந்தர் கணபதி கைது செய்யப்படுவதற்கு முன்பே, வாதியிடம் கொடுத்தனுப்பக்கூடிய ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள், காசோலைகளின் எண்கள் மற்றும் விவரங்கள் கோர்ட்டுக்கு தெரியப்படுத்தப்பட்டு விட்டது. எனவே புதிதாக எதையும் கைப்பற்றப்போவது இல்லை. வழக்கின்மேல் விசாரணைக்காக கணபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.

வக்கீல் ஞானபாரதி:- பிரமாண பத்திரத்தில் போதிய முகாந்திரம் இல்லை. வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். எந்த வங்கி காசோலை என்று முன்பு குறிப்பிடாமல், இப்போது பேங்க் ஆப் இந்தியா வங்கி காசோலை என்றும் அதுதொடர்பான விவரங்களையும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். முறையான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யாததும் ஒருவகையில் தவறுதான்.

அப்போது அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களுக்கு இடையில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

அரசு தரப்பு வக்கீல் சிவக்குமார்:- போலீஸ் விசாரணையில் எதுவும் தவறில்லை. சரியான ஆவணங்களைத்தான் தாக்கல் செய்துள்ளோம். இது லஞ்சப்பணத்தை பொறுக்கி திண்ண குற்றம் தொடர்பானது. எனவே அவரை காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

உடனே நீதிபதி குறுக்கிட்டு, வழக்கு தொடர்பான விவாதங்களை மட்டும் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜான்மினோ மனு மீது மாலை 3.30 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக தள்ளி வைத்தார்.

வழக்கு தொடர்பான விவாதங்களை துணைவேந்தர் கணபதி கோர்ட்டில் உட்கார்ந்து மவுனமாக கவனித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரது கையில் திருவாசகம் புத்தகம் இருந்தது. அதனை படித்தபடி இருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் கணபதியை வருகிற 16-ந்தேதி மாலைவரை போலீசார் காவலில் விசாரிக்க அனுமதிப்பதாக நீதிபதி கூறினார். துணைவேந்தருக்கு உணவு, மருத்துவ வசதி அளிப்பதுடன், மனரீதியாக, உடல்ரீதியாக எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கணபதியை, கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.

சிறையில் துணைவேந்தருக்கு முதல் வகுப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று(செவ்வாய்க்கிழமை) இந்த கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. 

Next Story