பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து புதுவைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு தடைசெய்யப்பட்ட போதைபொருட்கள் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதுபற்றி அறிந்தவுடன் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன், ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் மறைமலையடிகள் சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு வந்த தனியார் பஸ் ஒன்றில் வந்த அட்டை பெட்டிகளை (பார்சல்) எடுத்துக்கொண்டு 2 வாலிபர்கள் செல்ல முயன்றனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதையடுத்து அவர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அப்போது அதனுள் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பார்சலை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 22), தவளக்குப்பம் கைலாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை கடத்தி புதுவையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து சரவணன், கைலாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். 

Next Story