காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்தனர்.

கோவை,

காதலர் தினம் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியபடி சாலையில் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்தனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் காதலர்கள் சிலர் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்றனர். இதனால் தான் நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம் என்றனர். இதில் நிறுவன தலைவர் அன்புமாரி, மாநில பொதுச்செயலாளர் ஜெகதீசனார், மாநில இளைஞர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத் சேனா அமைப்பின் செய்திதொடர்பாளர் ஸ்டோன் சரவணன், பாரத் சேனா (தமிழகம்) சார்பில், நிர்வாகி மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் அளித்த மனுவில், நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பூங்காக்கள், வணிக வளாகங்கள், சுற்றுலாதலங்களில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளும் காதலர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பின்னர் இரு அமைப்பினரும் தனித்தனியாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story