குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2018 3:15 AM IST (Updated: 13 Feb 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

கொசவப்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளில் குறைந்தளவே தண்ணீர் இருக்கிறது.

வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர் அப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி அந்த தண்ணீரையும் சிலர் மின்மோட்டார் மூலம் திருடுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை.

இதனால் தண்ணீரை பொதுமக்கள் விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை 8 மணி அளவில் திண்டுக்கல்-நத்தம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி, கலலூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக் கப்பட்டனர். சாலையின் இரு இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story