மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த தொழிலாளி அனாதையான 3 குழந்தைகள்


மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்த தொழிலாளி அனாதையான 3 குழந்தைகள்
x
தினத்தந்தி 12 Feb 2018 11:45 PM GMT (Updated: 12 Feb 2018 8:29 PM GMT)

பாளையங்கோட்டையில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதனால் 3 குழந்தைகள் அனாதையாயின.

நெல்லை,

பாளையங்கோட்டை சம்பகடை தெருவைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள மீன் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அந்தோணி அம்மாள் (36). இவர்களுக்கு கோபி (11), சங்கரன் (8) ஆகிய 2 மகன்களும், நந்தினி (10) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர்.

மோகன், அந்தோணி அம்மாள் ஆகிய 2 பேரும் குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கினர். பின்னர் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தோணி அம்மாள் தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, மகள் நந்தினியுடன் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரில் உள்ள அக்காள் ரஞ்சிதத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு அக்காள் வீட்டின் அருகில் வாடகை வீடு எடுத்து, தன்னுடைய மகளுடன் வசித்து வந்தார். நேற்று காலையில் அந்தோணி அம்மாள் வழக்கம்போல் தன்னுடைய மகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார். மதியம் அந்தோணி அம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். அங்கு வந்த மோகன் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். கணவருடன் செல்ல அந்தோணி அம்மாள் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த மோகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய மனைவியின் கழுத்து, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். அலறி துடித்த அந்தோணி அம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்தோணி அம்மாளின் அக்காள் ரஞ்சிதம் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

மோகன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அந்தோணி அம்மாளை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே மோகன் தன்னுடைய இளைய மகன் சங்கரன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்று, அவனை அழைத்து வந்தார். அப்போது மோகன் வீட்டுக்கு செல்லும் வழியில் விஷம் குடித்தார். இதனால் தெருவில் மகனுடன் நடந்து சென்றபோது, மோகன் திடீரென்று மயங்கி விழுந்தார். அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மோகன், அந்தோணி அம்மாளின் உடல்களைப் பார்த்து, அனாதையான அவர்களுடைய குழந்தைகள், உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. மனைவியை கொலை செய்து விட்டு, கணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story