குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்


குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 13 Feb 2018 3:45 AM IST (Updated: 13 Feb 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மக்கள், கலெக்டரிடம் 3 மனுக்கள் கொடுத்தனர்.

அந்த மனுக்களில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்க வேண்டும். சாலை, தெருவிளக்கு, பயணிகள் நிழற்குடை உள்பட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவேண்டும். சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பொருளூரை அடுத்த நாச்சியப்பகவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி கிராம மக்கள் கூறுகையில், நாச்சியப்பகவுண்டன்வலசு கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மோட்டார் பழுதாகி விட்டது. அதன்பின்னர் மோட்டாரை சரிசெய்யவில்லை. இதனால் விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். பழுதான மோட்டாரை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும், என்றனர்.

அதேபோல் பெரியகோட்டை அருகேயுள்ள பாறைப்பட்டி கிராமமக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதில், பாறைப்பட்டியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் தண்ணீர் எடுக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள சின்னபள்ளப்பட்டி மக்கள் கொடுத்த மனுவில், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த மயானபாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். 

Next Story