குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டும், வங்கி கடன் உதவி வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு கேட்டும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மொத்தம் 309 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் மனம் திருந்திய மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 9 கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதி உதவியினையும், கபிலர்மலை ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவர் பணியின்போது மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது மகன் செந்திலுக்கு கருணை அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான உத்தரவு ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

அதை தொடர்ந்து தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், 39 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளையும்் வழங்கினார். மொத்தமாக நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்் 57 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) துரை, உதவி ஆணையர் (கலால்) இலாஹிஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) ஹசீனாபேகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story