காது கேளாதவர்கள் ஒலியை உணர கருவி கண்டுபிடிப்பு கோத்தகிரி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை


காது கேளாதவர்கள் ஒலியை உணர கருவி கண்டுபிடிப்பு கோத்தகிரி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 13 Feb 2018 3:00 AM IST (Updated: 13 Feb 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

காது கேளாதவர்களுக்கு ஒலியை உணர வைக்கும் கருவியை கோத்தகிரி அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்தனர்.

கோத்தகிரி

அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடையே அறிவியல் திறமையை வளர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு இடைநிலை கல்வித்துறை சார்பில் மாநில அளவில் அறிவியல் ஆய்வு கட்டுரை போட்டி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் பங்கேற்றன. இதில் கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் தனுஷ் குமார் தலைமையில் 5 மாணவர்கள், காது கேளாதவர்களுக்கு ஒலியை உணர வைக்கும் கருவி குறித்த ஆய்வு கட்டுரை சிறந்த ஆய்வு கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டது. இதனால் அது மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவர்கள் தனுஷ்குமார், ஆதித்யன், சக்திவேல், தரிஷ், சவுந்திரராஜன், சஞ்சய் ஆகியோர் கூறியதாவது:-

காது கேட்காதவர்களுக்கு ஒலியை உணர வைக்கும் எளிமையான கருவியை கண்டுபிடித்து உள்ளோம். இதன் மூலம் காது கேளாத மாணவர்களும், பொதுமக்களும் இசையை ரசித்து அனுபவிக்கின்றனர். குழந்தைகளின் விளையாட்டு செல்போனில் ஒரு ஒலியை இணைத்து, அந்த ஒயரை காது கேளாதவர்களை பல்லில் கடிக்க செய்து செல்போனில் பாடல்களை இயக்கினால் அதில் பதிவாகியுள்ள இசை காது கேளாதவர்களுக்கும் கேட்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் இசையின் அதிர்வு பல்லில் உள்ள நரம்பு வழியாக கடத்தப்பட்டு காதில் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியை காது கேளாதவர்கள் மூலம் சோதித்து வெற்றி கண்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து நீலகிரி மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் ராஜீ கூறுகையில், அறிவியல் கண்டு பிடிப்புகளில் பல தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டவை. அரசு பள்ளி மாணவர்களின் இந்த கண்டு பிடிப்பு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. சரியான ஊக்கமும், அரசின் உதவியும், கிடைத்தால் மாணவர்கள் மேலும் சாதனை படைப்பார்கள் என்றார்.

அறிவியல் ஆசிரியை ரூபி பரிமளா கூறுகையில், இந்த கருவி மூலம் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கல்வி போதிக்க முடியும் என்றார். புதிய கருவியை கண்டுபிடித்த மாணவர்களை தலைமையாசிரியர் ஆரி உள்பட ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர் பாராட்டினர். கூக்கல்தொரை அரசு பள்ளி மாணவர்களின் எல்.இ.டி. பல்புகளின் ஆற்றல் சேமிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையும் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story