தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு


தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 13 Feb 2018 4:30 AM IST (Updated: 13 Feb 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று பட்டுக்கோட்டையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் நகரசபை தலைவர் ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது தினகரன், திறந்த வேனில் நின்றபடி பேசினார். அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவின் கோட்டையாக பட்டுக்கோட்டை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. இது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.

ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பணியில் இங்கிருந்து எண்ணற்ற பேர் பணியாற்றினர். ஆதலால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டனர். உண்மையான இயக்க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.

நாங்கள் எங்கு சென்றாலும் பொதுமக்கள், ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வோம். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

வருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் எல்லையான கரம்பயம் கிராமத்திற்கு தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story