சாலையோர ஓட்டலில் பஜ்ஜி சாப்பிட்டு,‘டீ’ குடித்த ராகுல்காந்தி


சாலையோர ஓட்டலில் பஜ்ஜி சாப்பிட்டு,‘டீ’ குடித்த ராகுல்காந்தி
x
தினத்தந்தி 13 Feb 2018 4:45 AM IST (Updated: 13 Feb 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில் சுற்றுப்பயணத்தின் போது ராகுல்காந்தி நேற்று சாலையோர ஓட்டலில் பஜ்ஜி சாப்பிட்டதுடன், ‘டீ‘ யும் குடித்தார்.

ராய்ச்சூர்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி கர்நாடகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கர்நாடக சுற்றுப்பயணத்தின் போது இந்து கோவில்களுக்கு மட்டுமே ராகுல்காந்தி சென்று சாமி தரிசனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலையில் ராய்ச்சூரில் உள்ள மசூதிக்கு சென்று ராகுல்காந்தி வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து தேவதுர்காவுக்கு ராகுல்காந்தி புறப்பட்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் லிங்கசுகூர் தாலுகா அருகே கல்மலா கிராமத்தில் திடீரென்று தான் சென்ற பஸ்சை நிறுத்தும்படி டிரைவரிடம் ராகுல்காந்தி கூறினார். அதன்படி, டிரைவரும் பஸ்சை நிறுத்தினார். உடனே பஸ்சில் இருந்து இறங்கிய ராகுல்காந்தி சாலையோரம் இருந்த ஓட்டலுக்கு சென்றார். இதை பார்த்ததும் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களும் ராகுல்காந்தியுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்கள்.

அந்த ஓட்டலில் ராகுல்காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்து மிளகாய் பஜ்ஜிகளை வாங்கி சாப்பிட்டனர். மிளகாய் பஜ்ஜியை ராகுல்காந்தி சுவைத்து சாப்பிட்டார். மேலும் தனக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பஜ்ஜிகளை எடுத்து அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் ராகுல்காந்தி கொடுத்தார். அத்துடன் அங்கு அவர் ‘டீ‘ யும் குடித்தார். பின்னர் ஓட்டல் உரிமையாளரான பெண்ணிடம் வியாபாரம் நல்ல படியாக நடக்கிறதா? தினமும் எத்தனை ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்று ராகுல்காந்தி கேட்டார்.

உடனே அவர், தினமும் ரூ.2 ஆயிரத்திற்கு வியாபாரம் நடக்கும் என்று பதில் கூறினார். அதன்பிறகு, ராகுல்காந்தி பஜ்ஜிகள், டீ குடித்த செலவாக தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்து ஓட்டலின் பெண் உரிமையாளரிடம் கொடுத்தார். அவர் பஜ்ஜி, டீக்கான பணம் போக மீதி பணத்தை ராகுல்காந்தியிடம் கொடுத்தார். ஆனால் அவர் அந்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முன்னதாக ராகுல்காந்தி ஓட்டலுக்கு வந்திருப்பது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் அவரை பார்க்க திரண்டு வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய ராகுல்காந்தி கர்நாடக அரசின் திட்டங்கள் பற்றியும், சாதனைகள் பற்றியும் எடுத்து கூறினார்.

Next Story