வக்கீல்கள் போன்று உடை அணிந்து வந்து 2 பேர் கோர்ட்டில் சரண்


வக்கீல்கள் போன்று உடை அணிந்து வந்து 2 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 13 Feb 2018 4:47 AM IST (Updated: 13 Feb 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடந்த பா.ஜனதா கவுன்சிலரின் கணவர் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் நேற்று வக்கீல்கள் போன்று உடை அணிந்து கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு அஞ்சனப்பா கார்டனில் வசித்து வருபவர் ரேகா. இவர் பெங்களூரு மாநகராட்சியின் சாளவாடிபாளையா வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருடைய கணவர் கதிரேஷ். கடந்த 7-ந் தேதி அஞ்சனப்பா கார்டனில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற புனரமைப்பு பணியை பார்வையிட்டபோது கதிரேசை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துவிட்டு ராஜேஷ் நடராஜ் என்பவரின் மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடிவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் வினய், நவீன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. தலைமறைவான கொலையாளிகளை கைது செய்யும் நோக்கத்தில் போலீசார் தமிழகத்துக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் வினய், நவீன் ஆகியோர் வக்கீல்கள் போன்று உடை அணிந்து பெங்களூரு 24-வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டுக்கு வந்தனர். பின்னர், அவர்கள் கதிரேசை கொலை செய்ததாக கூறி நீதிபதி முன்பு சரண் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காட்டன்பேட்டை போலீசார் ‘வினய், நவீன் ஆகியோரிடம் கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது. 2 பேரையும் 15 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும்‘ என்று நீதிபதியிடம் அனுமதி கோரினர்.

இதை ஏற்று கொண்ட நீதிபதி சரண் அடைந்த வினய், நவீன் ஆகியோரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த காட்டன்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் 2 பேரும் திருப்பதி சென்று மொட்டை அடித்து கொண்டதோடு, சென்னை சென்று தலைமறைவானது, அங்கிருந்து பெங்களூரு வந்து சரண் அடைந்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.


Next Story