தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை அமைச்சர் பேட்டி


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் பேராசிரியர் தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் பாண்டிய ராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளுக்கு அண்மையில் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சிலர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தஞ்சையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாண்டியராஜனிடம், இந்த முறைகேடு புகார் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

இது சம்பந்தமாக தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இன்று(நேற்று) காலை ஆய்வு செய்தோம். பேராசிரியர் தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒரேயொரு பணியிடத்திற்கு அந்த துறையை சேர்ந்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மற்றவர்களை தேர்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அந்த பணியிடத்திற்கு மறு விளம்பரம் செய்யப்படும்.

ஏற்கனவே பேராசிரியர் அல்லாத பணியாளர்கள் 29 பேர் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். பேராசிரியர் பணிக்காக 450 பேர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு 10 பேர் கொண்ட குழு என்ன மதிப்பெண் கொடுத்தார்களோ அந்த அடிப்படை தகுதியின் படி தான் நியமிக்கிறோம். இடஒதுக்கீடு, ‘ஸ்லெட்’ தேர்வு உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. இதை நானே நேரில் ஆய்வு செய்தேன்.

எந்த முறைகேடுக்கும் வாய்ப்பு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் 20 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சரிடம் கையெழுத்துக்காக நியமன ஆணை காத்து இருக்கிறது. 20 பேருக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும். முறைகேடு புகார் தெரிவித்த 4 பேரையும் அழைத்து பேசினேன். அவர்கள் சொன்ன பல கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது.

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ திட்டத்தின் கீழ் காஷ்மீருக்கும், தமிழகத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 36 அம்சங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் காஷ்மீரில் இருந்து 5 கலைக்குழுவினர் தமிழகத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அதேபோல தமிழகத்தில் இருந்து 5 கலைக்குழுவினர் காஷ்மீருக்கு சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். காஷ்மீரில் உள்ள 100 பள்ளிகளில் அடிப்படை தமிழ்மொழி கற்றுக் கொடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள 100 பள்ளிகளில் காஷ்மீரின் அடிப்படை மொழி கற்றுக் கொடுக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் வளர் மையம்’ தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தி பிரசார சபை சார்பில் இந்தி மொழியை பல இடங்களுக்கு கொண்டு சென்று 2-வது, 3-வது மொழியாக இந்தியை புரிந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல ‘தமிழ் வளர் மையம்’ மூலம் தாய்மொழி அல்லாதவர்களும் தமிழ்மொழியை புரிந்து கொள்ளும் வகையில் உலக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருக்கிறோம். இந்த திட்டத்தை வேகப்படுத்தி 17 நாடுகளில் இந்த மையத்தை அமைக்க மத்திய அரசுடன் பேசி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story