மீன் பதப்படுத்தும் நிறுவனங்களில் வருமான வரி சோதனை கணக்கில் காட்டாத ரூ.195 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு


மீன் பதப்படுத்தும் நிறுவனங்களில் வருமான வரி சோதனை கணக்கில் காட்டாத ரூ.195 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2018 2:00 AM IST (Updated: 14 Feb 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு, உடுப்பியில் செயல்பட்டு வரும் 3 மீன்பதப்படுத்தும் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்ததில் கணக்கில் காட்டாத ரூ.195 கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு,

மங்களூரு, உடுப்பியில் செயல்பட்டு வரும் 3 மீன்பதப்படுத்தும் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடந்ததில் கணக்கில் காட்டாத ரூ.195 கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ரூ.88 லட்சம் கைப்பற்றப்பட்டு உள்ளது. அத்துடன், சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்ததும் அம்பலமாகி உள்ளது.

வருமான வரி சோதனை

மங்களூரு, உடுப்பியில் செயல்பட்டு வரும் 3 மீன்பதப்படுத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. அதன்படி, கடந்த 8-ந் தேதியில் இருந்து 3 நாட்கள் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில் கர்நாடக-கோவா மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கர்நாடகம், கோவா, மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சட்டவிரோத பணப்பரிமாற்றம்

மங்களூரு, உடுப்பி மட்டுமின்றி பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி, பெலகாவி, பானாஜி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள 3 நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 3 மாதங்களாக இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணித்து சோதனை நடத்தப்பட்டது.

அப்போது சில ஏஜெண்டுகள் மூலம் கடனாக மீன் விற்கப்பட்டு போலி கணக்கு காட்டியதும், துபாய், ஓமன், மொரிஷீயஸ், மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து சீனா நாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் இந்திய இடைத்தரகர்களுக்கு கமிஷன் அடிப்படையில் வெளிநாட்டு வங்கி கணக்குகளில் இருந்து சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

ரூ.195 கோடி சொத்துகள்

தரம் குறைந்த மீன் எண்ணெய் தயாரித்து தரமானது என ஆய்வகத்தில் சான்றிதழ் பெறப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளது. டீசலுக்காக வழங்கும் மானியமும் பினாமி பெயரில் பெறப்பட்டுள்ளது. மேலும் கணக்கில் காட்டாத ரூ.195 கோடி சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.88 லட்சம் கைப்பற்றப்பட்டு உள்ளது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்துவது, வெளிநாட்டு வங்கி கணக்குகளை ஆய்வு செய்வது ஆகியவற்றின் மூலம் கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. முதற்கட்ட சோதனையின்போது அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு, வெளிநாட்டு பணம் மாற்றும் விதிமுறை மீறல், பணமோசடி ஆகியவற்றில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story