காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கக் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

காரைக்குடி,

காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள செங்குட்டுவன் தெரு, அவ்வையார் தெரு, பீர்க்கலை சாத்தனார் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதியின் குடிநீர் வினியோகத்திற்காக ரஸ்தா பகுதியில் 2 போர்வெல்கள் போடப்பட்டன. இதில் ஒன்றில் சுகாதாரமான குடிநீர் வரவில்லை என்று புகார் கூறி வழக்கு தொடரப்பட்டதன் பேரில் அந்த போர்வெல் மூடப்பட்டது. அதன் பின்னர் அடுத்துள்ள ஒரு போர்வெல் மூலமே அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த போர்வெல் மூலம் 24 மணி நேரம் வந்த குடிநீர் தற்போது காலை வேளையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் பாதிப்படைந்தனர்.

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் அன்பழகன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் நகராட்சி ஆணையாளர் சுந்தராம்பாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் உறுதி அளித்தார். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story