எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்தது ஏன்? தஞ்சையில், டி.டி.வி.தினகரன் விளக்கம்


எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்தது ஏன்? தஞ்சையில், டி.டி.வி.தினகரன் விளக்கம்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்தது ஏன்? என்பது குறித்து தஞ்சையில் டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர்,


தஞ்சையில், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு

கேள்வி:- தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

பதில்:- தவறு செய்ததை மூடி மறைக்கப்பார்க்கிறார்கள். நிறைய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அதனால் தான் தமிழகத்தில் நடைபெறும் அரசை மக்கள் விரோத அரசு என்று மக்கள் சொல்கிறார்கள். அதை எதிர்த்து போராடுகிறார்கள். கல்வித்துறை மட்டுமின்றி அனைத்துத்துறைகளின் நோக்கம் என்பது மக்களுக்காக நல்ல திட்டங்களை தீட்டி, அந்த திட்டங்கள் மூலம் மக்கள் பயன் பெற வேண்டும். ஆனால் சில குழுவினர் பதவியில் இருந்தால் போதும் என செயல்படுகின்றனர். அவர்களுக்கு தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வரலாறு பற்றி தெரியாது. பேராசிரியர் பணியிடத்தின் மூலம் எவ்வளவு லாபம் பெறலாம் என எண்ணுகின்றனர். இந்த ஆட்சி சீக்கிரம் முடிவுக்கு வர வேண்டும் என்பது மக்களின் விருப்பம்.

கேள்வி:- பேராசிரியர் பணியிடத்திற்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக கூறப்படுகிறதே?

பதில்:- எல்லாத்துறை களிலும் ஊழல் நடக்கிறது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒரு பணிக்கு 30 முதல் 40 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் தான் அந்த பணிகள் தரம் இன்றி காணப்படுகிறது. தஞ்சை மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளதால் பாலம் தரம் இன்றி காணப்படுகிறது.

எடப்பாடி-ஸ்டாலின் சந்திப்பு

கேள்வி:- தமிழகத்தில் காவியை பரவச் செய்வோம் என்று பா.ஜனதாவினர் சொல்கிறார்களே?

பதில்:- நாம் பொங்கல் பண்டிகைக்கு வீடுகளில் காவி நிறத்தில் வெள்ளை அடிப்போம். அதை பற்றி அவர்கள் சொல்லி இருப்பார்கள்.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து போக்குவரத்துத்துறை தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறாரே?

பதில்:- அவர்(மு.க.ஸ்டாலின்) அரசியலுக்காக சந்தித்து இருக்கிறார். ஏற்கனவே நிதி பற்றாக்குறை என்று சொன்னார்கள். ஆனால் சட்டசபை உறுப்பினர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு எங்கிருந்து நிதி வந்தது. இந்த ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. இருக்கும் வரை கிடைத்தால் போதும் என செயல்பட்டு வருகிறார்கள். அரசியல் தான் செய்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லை. அவர்(மு.க.ஸ்டாலின்) கொடுத்து இவர்(எடப்பாடி பழனிசாமி) செய்வாரா?. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நானும், மு.க.ஸ்டாலினும் சட்டசபையில் வலியுறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி அவர்களை அழைத்து பேசினாரா? இல்லையே? அவர் எதையும் செய்யமாட்டார். அவர் வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. எங்கள் இரட்டை இலை சின்னத்தை நாங்களே தோற்கடிக்கும் சூழ்நிலை உருவாகுவதற்கு தவறானவர்கள் ஆட்சியில் இருப்பது தான் காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பதவிக்கு ஆபத்து

கேள்வி: அ.தி.மு.க. அடையாள அட்டை வைத்து இருப்பவர்களுக்கே அரசு வேலை, நலத்திட்ட உதவிகள் என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் பேசி இருப்பது பற்றி?

பதில்: நிர்வாகிகள் அனைவரும் வருமானத்திற்காக அவர்களுடன் இணைந்து இருக்கிறார்கள். அவர்களும் ஓடி போய்விடக்கூடாது என்பதற்காக இப்படி பேசுகிறார்கள். ஆனால் யாராவது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தால் எந்த பதவியில் இருக்கிறார்களோ அதற்கு ஆபத்து வந்துவிடும். சீனியர் அமைச்சரான செங்கோட்டையனுக்கு கூட தெரியவில்லை.

கேள்வி: உங்கள் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் இருந்து தொடர்ந்து நீக்கப்படு கிறார்களே?

பதில்: அ.தி.மு.க. தொண்டர்கள் தான் நீக்கப்பட்டு வருகிறார்கள். கடைசியில் அங்கே(அ.தி.மு.க.) ஒருங் கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களும், அவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர் களும் தான் இருப்பார்கள்.

சுயநலமே காரணம்

கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட விழாவில் ஒரே நினைவு பரிசு மாணவர் களுக்கு மாறி, மாறி வழங்கப்பட்டது பற்றி...?

பதில்: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் சுயநலம் தான் காரணம். வரும் காலத்தில் அரசியலில் இருந்து அவர் ஓரம் கட்டப்படுவார். எந்த தினகரனால் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்-அமைச்சர் பதவி வரை வந்தாரோ, அதே தினகரனால் அவர் ஓரம் கட்டப்படுவார். வரும் தேர்தலில் போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டால் அவரது டெபாசிட்டை காலி செய்து பழைய தொழிலை மீண்டும் செய்ய அனுப்பி வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story